தமிழகம்

90 அடியைத் தாண்டியது நீர்மட்டம்: மேட்டூர் அணை திறப்பு எப்போது?

கல்யாணசுந்தரம்

மேட்டூர் அணை நீர்மட்டம் 90 அடிக்கு மேல் உள்ளதாலும், நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதாலும் டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடியை மேற்கொள்ள வசதி யாக வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் அணையைத் திறக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேட்டூர் அணையில் போதிய நீர்இருப்பு இல்லாததால் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்த ஆண்டும் குறுவை சாகுபடிக்கு ஜூன் மாதத்தில் தண்ணீர் திறக் கப்படவில்லை. இந்நிலையில், கர்நாடகத்தில் காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாக அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவும் அதிகரித்துள்ளது.

ஜூலை 20-ம் தேதி நிலவரப்படி கர்நாடக அணைகளின் மொத்த நீர் இருப்பு 83.5 டி.எம்.சி.யாக உள்ளது. கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 9,035 கன அடியும், கபினியில் இருந்து 20,000 கன அடியும் தமிழகத்துக்குத் திறக்கப்படுகிறது.

மேட்டூர் அணையில் நேற்று மாலை நிலவரப்படி நீர்மட்டம் 91.41 அடியாகவும், அணைக்கு நீர்வரத்து நேற்று காலை நிலவரப்படி 25,591 கன அடியாகவும் இருந்தது. குடிநீருக்காக 1,178 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கடந்த 3 நாட்களில் அணையின் நீர்மட்டம் 4 அடிக்கு உயர்ந்திருக்கிறது. ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும். இந்தாண்டு நீர்இருப்பு போதிய அளவில் இல்லாததால், சம்பா சாகுபடிக்கு அணையில் இருந்து நீர் திறக்கப்படவில்லை.

இந்நிலையில், டெல்டா மாவட் டங்களில் குறுவை சாகுபடி முழுமையாக மேற்கொள்ளப்படாத நிலையில், ஒருபோக சம்பா சாகு படியை மேற்கொள்ள மேட்டூர் அணை திறப்பு குறித்த அறிவிப்பை டெல்டா விவசாயிகள் எதிர்நோக்கி யுள்ளனர்.

இதுகுறித்து விவசாய சங்கங் களின் கூட்டமைப்பு பொதுச் செய லாளர் ஆறுபாதி கல்யாணம் கூறியதாவது: சம்பா பருவத்தைப் பொறுத்த வரை 145-150 நாட்கள் வயது டைய நெல் ரகங்கள் ஏற்றவை. இந்த பருவத்தில் நெல் நடவுப் பணிகளை செப்டம்பர் இறுதிக்குள் முடித்தால்தான் அக்டோபர், நவம்பர் மாதங்களில் வடகிழக்குப் பருவ மழை மூலமாக வரும் வெள்ளத்தால் பயிர்கள் பாதிக்காமல் இருக்கும். வெள்ளம் பாதிக்காத மேட்டுப்பாங்கான பகுதிகளில் வேண்டுமானால் 125-135 நாட்கள் வயதுடைய ரகங்களை பயிரிடலாம். இதற்கு வசதியாக மேட்டூர் அணையை ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் திறந்தால் பயனுள்ளதாக இருக்கும்.

ஆறுகள், வாய்க்கால்கள் தூர்வாரப்படா ததால் வயல்களை தண்ணீர் சென்று சேருவதில் பெரும் சிரமம் இருக்கிறது. இதனால் தண்ணீர் திறப்பதற்கு முன்பாக வருவாய் கோட்ட அளவிலும், மாவட்ட அளவிலும் பொதுப்பணி, வேளாண்மை, வருவாய்த் துறை களின் அதிகாரிகள் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கொண்ட கூட்டத்தைக் கூட்டி இதற்கான திட்டமிடுதல்களை மேற்கொள்ள வேண்டும். மேலும், சம்பா சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள் மற்றும் இடுபொருட்களை தட்டுப்பாடில்லாமல் விநியோகிக்க அரசு முன்னதாகவே திட்டமிட வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT