எல்லையில் தீவிரவாதிகள் தாக்குதலில் வீர மரணம் எய்திய தமிழக வீரர் அனீஷ்-க்கு சமக தலைவர் சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஷோபியான் மாவட்டம், பாராபக் எல்லைப் பகுதியில் தீவிரவாதத் தாக்குதல்களால் தமிழக ராணுவ வீரர் அனீஷ் என்பவர் வீர மரணம் அடைந்திருப்பது எல்லையில்லாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டம் சித்திரம்கோடு கிராமத்தைச் சேர்ந்த அனீஷ்-ன் தியாகம் தமிழர்களாகிய நாம் பெருமைகொள்ள வைப்பதாகும்.
இந்த தேசத்தின் ஒரு பிடி மண் கூட அந்நிய தேசத்திற்கு சென்றுவிடக் கூடாது என்பதிலும், தீவிரவாதிகளிடமிருந்து இந்த தேசத்தைக் காப்பாற்றியே தீருவோம் - தீவிரவாதத்தை வேரோடு அறுப்போம் என்பதிலும் தேசத்தின் கடைக்கோடியில் இருப்பவருக்கும் கூட உணர்வில் கலந்த விஷயம் என்பது அனீஷ்-ன் தியாகத்தின் மூலம் தெரியவந்துள்ள உண்மை.
வீரமரணம் எய்தியுள்ள அனீஷ்-க்கு சமத்துவ மக்கள் கட்சி சார்பில் வீரவணக்கத்தையும், அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் அன்னாரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர்கள், உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரது துயரத்திலும் பங்கேற்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.