மதுரை - ராமநாதபுரம் நான்குவழிச் சாலை திட்டத்துக்காக சுமார் 2,500 மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டுள்ளன. மேலும் ஏராளமான மரங்கள் வெட்டப்பட உள்ளதால், இப்போதே புதிய மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
மதுரை - ராமேசுவரம் நான்கு வழிச் சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக மதுரை - பரமக்குடி இடையே 76 கி.மீ. தூரம் நான்குவழிச் சாலை அமைக்கும் பணியை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின்கட்கரி கடந்த 17-ம் தேதி தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, சாலையின் இருபுறமும் உள்ள மரங்கள் மின்னல் வேகத்தில் வெட்டப்பட்டு வருகின்றன.
மர அறுவை இயந்திரங்கள் மற்றும் மண் அள்ளும் இயந்திரங் களின் உதவியுடன் 10 நாட்களுக்குள் சுமார் 2,500 மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டுள்ளன. இதனால் பார்த்திபனூர், மானாமதுரை, ராஜகம்பீரம், திருப்பாச்சேத்தி ஆகிய இடங்களில் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் பாலைவனம்போல காட்சி தரு கிறது.
இதுகுறித்து ராமநாதபுரத்தைச் சேர்ந்த கதிரேசன் என்பவர் கூறியது: இந்திய வனக்கொள்கையின்படி, நாட்டின் மொத்த பரப்பளவில் மூன்றில் ஒரு பங்கு காடு இருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் 17 சதவீதம் மட்டுமே வனப்பகுதி உள்ளது. வறண்ட மாவட்டமான ராமநாதபுரத்தில் வெறும் 6.7 சதவீதம், சிவகங்கையில் 7.7 சதவீதம்தான் காடுகள் உள்ளன.
சாலையோரங்களில் மட்டுமே மரங்களை பார்க்க முடிகிற ராமநாதபுரம், சிவகங்கை போன்ற மாவட்டங்களில் இவ்வளவு மரங்கள் வெட்டப்படுவது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். புதிய சாலையின் விளிம்பில் புதிய மரக்கன்றுகளை இப்போதே நட்டு பராமரிக்க வேண்டும்.
தமிழகத்தில் எந்த இடத்திலும் நான்குவழிச் சாலை அமைக்கப்பட்ட பிறகு புதிய மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்படவில்லை. இதேநிலை, ராமேசுவரம் நெடுஞ் சாலைக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது” என்றார்.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட வன அலுவலர் குருசாமியிடம் கேட்டபோது, எத்தனை மரங்கள் வெட்டப்பட்டன என்ற விவரம், இப்போது என்னிடம் இல்லை. சாலை விரிவாக்கத்துக்காக மரங் கள் வெட்டப்படுவதை நாங்கள் தடுக்க முடியாது.
வெட்டப்படும் மரங்களின் விலை மதிப்பை நிர்ணயிப்பதற்கு மட்டும் எங்கள் உதவியை நாடினர்” என்றார்.
வருமுன் காக்குமா நெடுஞ்சாலை ஆணையம்?
நான்குவழிச் சாலை திட்டம் நிறைவேற்றப்பட்டபோது, தென்மாவட்டங்களில் மட்டும் மொத்தம் 67 ஆயிரம் மரங்கள் வெட்டப்பட்டன. புதிய மரக்கன்றுகள் நடப்படாததால், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றம், ஒரு மரத்துக்கு 10 என்ற வீதத்தில், மொத்தம் 6 லட்சத்து 70 ஆயிரத்து 640 மரக்கன்றுகள் 6 மாத காலத்துக்குள் நட வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு உத்தரவிட்டது. உத்தரவு வந்து ஒன்றரை ஆண்டாகியும் இன்னமும் அந்தப் பணி முழுமை பெறவில்லை. இதுபோன்ற ஏமாற்றத்தைத் தவிர்க்கவே, ராமேசுவரம் சாலையில் இப்போதே புதிய மரக்கன்றுகளை நட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய வழக்கறிஞர் அருள்வடிவேலனிடம் கேட்டபோது, “சாலை அமைக்கும் முன்பே, மரம் நடுவது சரியாக இருக்காது. எவ்வளவு தூரம் சாலை அமைகிறது என்று பார்த்துவிட்டு, அதில் இருந்து குறிப்பிட்ட இடைவெளிவிட்டு மரம் நடுவதுதான் உகந்ததாக இருக்கும். இந்தச் சாலை பணிக்கான உத்தரவிலேயே வெட்டப்படும் ஒவ்வொரு மரத்துக்கு பதில் 3 புதிய மரங்கள் நடப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை ஒப்பந்ததாரர்கள் நிறைவேற்றுகிறார்களா என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நிச்சயமாக கண்காணிக்கும் என்றார்.