நேர்மையான அதிகாரிகளை எந்தவிதத்திலும் தொந்தரவு செய்யக் கூடாது. நேர்மையான அதிகாரிகளை அவர்களின் உயர் அதிகாரிகள் காப்பாற்ற வேண்டும் என உயர் நீதிமன்றக் கிளை அதிரடியாக கருத்து தெரிவித் துள்ளது.
நெல்லை மாவட்டம், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வனச்சரகர் ஜெபஸ், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு:
எனக்கு எதிராக குற்றச்சாட்டு இருப்பதாகக் கூறி விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்காமல் என்னை 14.11.2013- ல் பணியிடை நீக்கம் செய்தனர். இதை எதிர்த்து உயர் நீதிமன்றக் கிளையில் மனுத் தாக்கல் செய்தேன். அதை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து, என்னை மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், வி.எம்.வேலுமணி ஆகியோர் கொண்ட அமர்வு பிறப்பித்த உத்தரவு: பொதுவாக பணியிடை நீக்க உத்தரவுகளில் நீதிமன்றம் தலையிடாது. இந்த வழக்கில் சில உண்மைகள் நீதிமன்றத்தை சங்கடப்படுத்தி உள்ளன. ஒருவரை பணியிடை நீக்கம் செய்யும்போது, அவர் மீது விசாரணை நிலுவை யில் இருக்க வேண்டும். கடுமை யான குற்றச்சாட்டுகள் இருக்க வேண்டும். ஆனால், மனுதாரரை பணியிடை நீக்கம் செய்யும் முன்பும், பிறகும் குற்றச்சாட்டு குறிப்பாணைகள் வழங்கப் பட்டுள்ளன. அவ்விரண்டு குற்றச் சாட்டு குறிப்பாணையிலும் கடுமை யான குற்றச்சாட்டுகள் எதுவும் கூறப்படவில்லை. வனப்பகுதியில் கணக்கில்லாமல் மரங்கள் வெட்டப் பட்டுள்ளன. இதைத் தடுக்க மனுதாரர் நடவடிக்கை எடுத்துள் ளார். மனுதாரர் தொடர்புடைய ஆவணங்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகே, மனுதாரர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப் பட்டுள்ளன.
மனுதாரர் 5 மாதங்களாக பணியிடை நீக்கத்தில் உள்ளார்.
நேர்மையான அதிகாரிகளை அளவின்றி தொந்தரவு செய்யக் கூடாது. நியாயமான அதிகாரி களை காப்பாற்றும் கடமை, உயர் அதிகாரிகளுக்கு உள்ளது. அதே சமயத்தில், தவறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, மனுதாரரின் பணியிடை நீக்க உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. 2 வாரத்தில் மனுதாரரை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.