தமிழகம்

கம்மலுக்காக சிறுமியை கடத்திக் கொன்ற கொடூரம்: திருத்தணி அருகே பயங்கரம்

செய்திப்பிரிவு

திருத்தணி அருகே நகைக்காக 8 வயது சிறுமி கடத்திச் சென்று படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த கார்த்திகாபுரம், பி.வி.என்.கண்டிகை என்ற இடத்தில், அரக்கோணம் அடுத்த போடிநாயுடு கண்டிகையைச் சேர்ந்த ருத்ரைய்யா என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. திங்கள்கிழமை காலை ருத்ரைய்யா தனது நிலத்துக்கு நீர் பாய்ச்ச சென்றார். அப்போது, அங்குள்ள விவசாய கிணற்றில் ஒரு சிறுமியின் இறந்த சடலம் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே, அது குறித்து திருத்தணி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும், தீயணைப்புத் துறையினரும் வரவழைக்கப்பட்டு கிணற்றில் இருந்து சிறுமியின் சடலத்தை மீட்டனர். இதுகுறித்து, போலீஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாவது:

இறந்த சிறுமி வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை அடுத்த வன்னி வேடு கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம்-அமுதா தம்பதியினரின் மகள் வனிதா (8). பள்ளி விடுமுறை என்பதால், தனது தம்பியுடன் அரக்கோணம் அடுத்த பெருமாள்ராஜ்பேட்டை கிராமத்தில் உள்ள தனது தாத்தா வீட்டுக்கு வந்துள்ளார்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதே கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் வனிதாவை சைக்கிளில் அழைத்துச் சென்றதை அவரது தம்பி பார்த்துள்ளார். இதன்பேரில், கார்த்திகேயனை பிடித்து விசாரணை நடத்தப்பட்டது.

அதில், சிறுமி வனிதா காதில் அணிந்திருந்த ஒரு சவரன் கம்மலை பறிப்பதற்காக, அழைத்துச் சென்று கொலை செய்து கிணற்றில் வீசியதாக தெரிவித்தார். இதையடுத்து, கார்த்திகேயனை போலீஸார் கைது செய்தனர். நகைக்காக சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம், திருத்தணி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் வேண்டாம்

பொதுவாக சிறுமிகளின் காதில் குண்டுமணி தங்கம் இருந்தாலும் இதுபோன்ற கொள்ளையர்களின் கண்களை உறுத்தும். நகையைவிட விலை மதிக்க முடியாதது உயிர் என்ற அறிவு இந்த கிராதகர்களுக்கு தெரிவதில்லை. எனவே குழந்தைகளுக்கு தங்க நகைகளை அணிவிக்காமல் சாதாரண பிளாஸ்டிக் கம்மல்களை அணிவித்தாலே போதுமானது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT