செல்வமகள் சேமிப்புத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் வரை 11 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக அஞ்சல் துறை தலைவர் சார்லஸ் லோபோ கூறினார்.
தமிழக அஞ்சல் வட்டத்துக் கான மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் சென்னை அண்ணா சாலையில் உள்ள வட்டார தலைமை அஞ்சல் துறை தலைவர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த குறைதீர்ப்பு கூட்டத்துக்கு வட்டார அஞ்சல் துறை தலைவர் சார்லஸ் லோபோ தலைமை வகித்தார்.
இந்த கூட்டம் தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் குறை களை அறிந்து கொள்ளும் விதமாக குறைதீர்ப்பு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. தமிழக அளவிலான குறைதீர்ப்புக் கூட்டங்கள் ஒவ்வொரு காலாண்டுக்கும் ஒரு முறை நடத்தப்படுகின்றன.
அஞ்சல் துறையின் பகுதிகள், பிரிவுகள் மற்றும் மண்டலங்கள் வாரியாக நடத்தப்படுகிற குறை தீர்ப்பு கூட்டத்தில் தீர்க்கப்படாத குறைகள் பற்றி வட்டார அளவிலான கூட்டங்களில் புகார் அளிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்றைய கூட்டம் நடந்தது.
பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்புத் திட்டத் தின் கீழ் தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் வரை 11 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டுள் ளன. அஞ்சல்காரர்கள் உரிய முறையில் கடிதங்களை கொண்டு சேர்ப்பதை உறுதி செய்வதற்கான கையடக்க டிஜிட்டல் கருவிகள் இன்னும் 3 மாதத்துக்குள் விநியோகிக்கப்படவுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.