கோவையில் ஜவுளிக்கடையில் தகராறில் ஈடுபட்ட போலி டிஐஜி அவரது பெண் நண்பருடன் நேற்று கைது செய்யப்பட்டார்.
கோவை சரவணம்பட்டி காவல் ஆய்வாளர் ஜோதிக்கு நேற்று முன்தினம் செல்போனில் அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசிய நபர், மத்திய கலால் டிஐஜி ராஜேந்திரன் பேசுகிறேன் என அறிமுகப்படுத்திக் கொண்டு, கோவையில் ஒரு சில கடைகளில் சோதனை நடத்த வேண்டும். அதற்கு, போலீஸ் படையை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளார்.
இதன்பேரில், இரு காவல் உதவி ஆய்வாளர்கள், இரு காவலர்கள் என 4 பேரை சரவணம்பட்டி காவல் ஆய்வாளர் ஜோதி அனுப்பி வைத்துள்ளார். தொடர்ந்து, காந்திபுரம் பகுதிக்கு போலீஸாரை வருமாறு டிஐஜி என்ற பெயரில் பேசிய நபர் கூறியுள்ளார்.
இதையடுத்து, அவரை சந்தித்த போலீஸார் அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளையும், உதவிகளையும் செய்துள்ளனர். தொடர்ந்து, போலீஸாரை தன்னுடன் அழைத்துக் கொண்ட டிஐஜி எனக் கூறிய நபர், காந்திபுரத்தில் உள்ள பிரபல ஜவுளிக்கடைக்குச் சென்று பொருட்களை வாங்கியுள்ளார். ஆனால், வாங்கிய பொருட்களுக்கு பணம் தர மறுத்ததாகக் கூறப் படுகிறது.
அவரது பேச்சில் சந்தேக மடைந்த கடை நிர்வாகத்தினர், அவர் குறித்த விவரங்களை கேட்டுள்ளனர். ‘என்னிடமே கேள்வி கேட்கிறீர்களா, நான் யார் தெரியுமா டிஐஜி’ எனக் கூறி, அவர் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது, சரவணம்பட்டி போலீஸாரும் உடன் இருந்துள்ளனர்.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட வரின் நடவடிக்கை தொடர்பாக உடன் இருந்த போலீஸார், காவல் ஆய்வாளருக்கு தெரிவித்துள் ளனர். இதையடுத்து, டிஐஜி என்ற கூறிய நபரிடம் அடையாள கார்டு உள்ளிட்ட விவரங்களை சந்தேகத்தின்பேரில் போலீஸார் கேட்டுள்ளனர். தொடர்ந்து, அவர் மழுப்பவே, அவரையும் உடன் இருந்த பெண்ணையும், சரவணம் பட்டி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்த தாவது:
டிஐஜியாக நடித்தவர், சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த சண்முகதுரை (49). போலீஸூக்கு கிடைக்கும் மரியா தையைக் கண்டு, டிஐஜி என நடித்து, முறைகேடாக பல இடங்களில் கைவரிசை காட்டி உள்ளார். அவருடன் இருந்த பெண், சென்னையைச் சேர்ந்த மீனாகுமாரி (50), கணவரைப் பிரிந்து, சண்முகதுரையுடன் வாழ்ந்து வருகிறார்.
பி.ஏ. பட்டதாரியான சண்முக துரை, கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு டிஐஜியாக பதவி வகித்து ஓய்வுபெற்ற ராஜேந்திரன் என்பவரின் பெயரைப் பயன்படுத்தி, பல இடங்களில் சோதனை என்ற பெயரில் மோசடியில் ஈடுபட் டது தெரிந்தது. அவருக்கு உடந்தையாக மீனாகுமாரியும் இருந்து வந்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, இருவர் மீதும் கூட்டுச்சதி, மோசடி, ஆள் மாறாட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் சரவணம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கைது செய்தனர்.
‘போலி’க்கு பாதுகாப்பு
இந்நிலையில், டிஐஜி என்ற பெயரில் பேசியவுடன் எதையும் விசாரிக்காமல் உடனடியாக போலீஸை பாதுகாப்புக்கு அனுப்பி வைத்த காவல் ஆய்வாளர் ஜோதியின் நடவடிக்கை கேள்விக்கு உள்ளாகியுள்ளது. ஜவுளிக்கடையில் போலீஸாருடன் சென்று பிரச்சினை எழுந்தபின், கடை நிர்வாகம் எழுப்பிய கேள்விகளுக்குப் பின்னரே சம்பந்தப்பட்ட நபர், ‘போலி டிஐஜி’ என்பது தெரியவந்துள்ளது. மோசடி நபருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கியுள்ளது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளரிடம் விளக்கம் பெறுவதற்கு பலமுறை தொடர்பு கொண்ட போதும் அவர் பதில் அளிப்பதைத் தவிர்த்தார்.