மத்திய அரசிடமிருந்து உள்ளாட்சி நிதியைப் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் அவர் இன்று கூறியிருப்பதாவது:
அதிமுக அரசின் அலட்சியத்தால் 2014-15-ம் ஆண்டில் தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கிடைக்க வேண்டிய மத்திய அரசின் நிதி பல கோடி ரூபாய் கிடைக்காமல் போய்விட்டது.
அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்களுக்கு கண்காணிப்பாளர்களை நியமனம் செய்வது, சொத்து வரி விதிக்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் அளிப்பது, உள்ளாட்சி அமைப்புகளின் நிதி தணிக்கை அறிக்கையை தாக்கல் செய்வது உள்ளிட்ட 9 நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என 13-வது நிதி ஆணையம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டால்தான் மத்திய அரசின் உள்ளாட்சிகளுக்கான நிதி கிடைக்கும். ஆனால், இதில் 7 நிபந்தனைகளை தமிழக அரசு நிறைவேற்றவில்லை. இதனால் பல கோடி ரூபாய் மத்திய அரசு நிதி தமிழகத்துக்கு கிடைக்கவில்லை. ஆனால், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்கள் அதிக நிதியை மத்திய அரசிடம் இருந்து பெற்றுள்ளன.
மத்திய அரசு நிதியை செலவழிக்காமல் திருப்பி அனுப்புவது அல்லது நிதியை வாங்காமல் இருப்பது ஆகியவைதான் அதிமுக அரசின் செயல்பாடாக உள்ளது. ஏற்கனவே நிதிப் பற்றாக்குறையால் வளர்ச்சித் திட்டங்களும் உள்கட்டமைப்புத் திட்டங்களும் முடங்கியுள்ளன. இந்தச் சூழலில் மத்திய அரசின் நிதியையும் தமிழகம் இழந்து நிற்கிறது.
13-வது நிதி ஆணையத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியது ஏன்? அதன்மூலம் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய மத்திய அரசின் உள்ளாட்சி நிதியை பெறத் தவறியது ஏன் என்பதற்கு தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும். அத்துடன் இழந்துவிட்ட உள்ளாட்சி நிதியை மத்திய அரசிடமிருந்து பெறுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.