தமிழகம்

போலி டிஐஜியை 2 நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

செய்திப்பிரிவு

கோவையில் கைது செய்யப்பட்ட போலி டிஐஜியை 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸாருக்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

கோவை சரவணம்பட்டியில் டிஐஜி எனக்கூறி, போலீஸாரை துணைக்கு அழைத்துக் கொண்டு வசூலில் ஈடுபட்ட சண்முகதுரை (49) என்ற போலி டிஐஜியையும், அவரது பெண் நண்பர் மீனாகுமாரியையும் (50) போலீஸார் கைது செய்தனர். மோசடி, ஆள்மாறாட்டம், கூட்டுச் சதி உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. போலி டிஐஜியின் சென்னை வீட்டிலிருந்து ரூ.25 லட்சம் ரொக்கம், ரூ.100 கோடிக்கும் அதிகமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த வழக்கு, சட்டம் ஒழுங்கு பிரிவிலிருந்து ,கோவை மாநகர குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து சண்முகதுரையை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் போலீஸார் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனு மீதான விசாரணை, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள, நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2-ல் நேற்று நடைபெற்றது. நீதித்துறை நடுவர் விஜய்கார்த்திக் முன்னிலையில் சண்முகதுரை ஆஜர்படுத்தப்பட்டார். அவரது பெண் நண்பர் ஆஜர்படுத்தப் படவில்லை.

விசாரணையில், ‘தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை’ என சண்முகதுரை நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதையடுத்து அவரை 2 நாள் (ஜூலை 14, 15 மதியம் வரை) காவலில் எடுத்து விசாரிக்க நீதித்துறை நடுவர் அனுமதியளித்தார்.

SCROLL FOR NEXT