தமிழகம்

3 ஆண்டுகளில் 900 பைக்குகள் மாயம்: மதுரையில் தொடர் திருட்டு

கே.கே.மகேஷ்

மதுரை சின்ன சொக்கிகுளத்தில் உள்ள பிரம்மாண்ட வணிக வளாகம் அருகே மாதம்தோறும் 25 மோட்டார் சைக்கிள்கள் வீதம் கடந்த மூன்று ஆண்டுகளில் 900 வாகனங்கள் திருட்டுப் போயுள்ளன.

சின்ன சொக்கிகுளத்தில் இந்தியன் ஆயில் அலுவலர்கள் குடியிருப்புக்கு பின்புறம், தனியார் வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகம் கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திறக்கப்பட்டது. இந்த இடம் இளைஞர்களின் பொழுது போக்குத் தளமாகத் திகழ்கிறது.

இங்கு வருபவர்கள் வணிக வளாகத்தில் வாகனங்களை நிறுத்தினால் கட்டணம் அதிகம் என்று, சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்துவது வழக்கம். இவ்வாறு நிறுத்தப்பட்ட வாகனங்கள் மிக அதிக அளவில் திருட்டு போகின்றன.

கடந்த புதன்கிழமை தனது ஹீரோ பேஷன் புரோ பைக் திருட்டுப்போனதாகவும், அதை கண்டுபிடித்துத் தருமாறும் இளைஞர் ஒருவர் பரப்பிய வாட்ஸ் அப் தகவல் இந்த தொடர் திருட்டு சம்பவத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.

இது குறித்து வணிக வளாகம் அருகே உள்ள ஆட்டோ நிலையத்தைச் சேர்ந்த டிரைவர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:

இந்த மால் திறந்த நாள் முதல் தினமும் ஒன்று என்ற கணக்கில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போய்க் கொண்டிருக்கின்றன. எனக்குத் தெரிந்து சுமார் 1200 பைக்குகள் திருட்டு போயுள்ளன. போலீஸில் புகாரான கணக்குப்படி பார்த்தால் கூட 900 பைக்குகள் காணாமல் போயிருக்கின்றன.

வணிக வளாகத்திற்குள் இருசக்கர வாகனத்தை நிறுத்த, ஒரு மணி நேரத்துக்கு 20 ரூபாய் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தினார்கள். பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், நோ பார்க்கிங் போர்டை போலீஸார் வைத்தனர்.

இதனால் அருகில் உள்ள கோகலே தெருவிலும், ராமமூர்த்தி சாலையிலும் வண்டியை நிறுத்த ஆரம்பித்தனர். அது வணிக வளாகத்தில் இருந்து தொலைவில் உள்ள பகுதி என்பதால், திருடர்களுக்கு வசதியாகப் போய்விட்டது. இச் சம்பவங்களைத் தொடர்ந்து வணிக வளாகத்தில் இருசக்கர வாகனங்களுக்கான கட்டணம் குறைக்கப்பட்டது. மாநகராட்சி சார்பிலும் அருகிலேயே வாகனக் காப்பகம் தொடங்கப்பட்டது. அதன் பின்னரும் சாலையோரங்களில் சிலர் வாகனங்களை நிறுத்துவதால், திருட்டு தொடர்கிறது என்றார்.

இது குறித்து வணிக வளாக நிர்வாகிகளிடம் கேட்டபோது, “விதிமுறைப்படி நாங்கள் வாகன நிறுத்துமிடம் வைத்துள்ளோம். அதற்குள் வாகனங்கள் திருட்டுப் போயிருந்தால் தான் நாங்கள் பொறுப்பேற்கலாம். வெளியே நிறுத்தினால் நாங்கள் எப்படி பொறுப்பேற்க முடியும்?” என்றனர்.

தல்லாகுளம் காவல் ஆய்வாளர் பிரேமானந்தனிடம் கேட்டபோது, “1200 பைக்குகள் காணாமல் போக வாய்ப்பில்லை. மிகைப்படுத்திக் கூறுகிறார்கள். நான் பொறுப்பேற்று 6 மாதமாகிறது. முதல் 3 மாதத்தில் சுமார் 30 பைக்குகள் காணாமல் போயின. இதைத் தொடர்ந்து தனியார் பங்களிப்புடன் காவல் துறையினர் 6 இடங்களில் கேமரா பொருத்தினோம். அதன் பிறகு திருட்டுச் சம்பவங் கள் குறைந்துள்ளன. திருட்டு போன வாகனங்களையும் உடனுக்குடன் கண்டுபிடித்து விடுகிறோம்”என்றார்.

SCROLL FOR NEXT