கிருஷ்ணகிரி அருகே வீட்டுக்குள் பதுங்கியிருந்த சிறுத்தைப் புலி 10 மணி நேர போராட்டத்திற்கு பின் மயக்க ஊசி போட்டு பிடிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியில் உள்ள வனத்தில் சிறுத்தைப் புலி நடமாட்டம் உள்ளது. அவ்வப்போது ஊருக்குள் புகுந்து மக்களை மிரட்டிய சம்பவங்களும் நடந்துள்ளது. இந்நிலையில் சூளகிரி அருகே விவசாயி வீட்டுக்குள் நேற்று சிறுத்தைப் புலி புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அட்டகுறுக்கி அருகே கானலட்டி கிராமம் வனப்பகுதியை ஒட்டி உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமையா. விவசாயி. கடந்த சில தினங்களுக்கு முன்பு சாலை விபத்தில் இறந்துவிட்டார். இவரது மனைவி அம்மையா. இவர்களுக்கு ஸ்ரீதர், சேகர், கோபால் ஆகிய மகன்களும், காவியா என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில் அம்மையா, ஸ்ரீதர் ஆகியோர் சனிக்கிழமை காலை 6 மணியளவில் வீட்டுக்கு வெளியே நின்றிருந்தனர். அப்போது வீட்டிற்குள் திடீரென சிறுத்தைப் புலி நுழைந்துள்ளது. இதைப்பார்த்த தாயும், மகனும் அதிர்ச்சியடைந்தனர். உடனே வீட்டுக்குள் தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகளை வெளியே வரவழைத்து வீட்டை பூட்டினர்.
இதுகுறித்து காவல்துறை மற்றும் வனத்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்ட முயற்சி செய்தனர். ஆனால் சிறுத்தைப் புலி வெளியே வரவில்லை. சமையலறை புகைபோக்கி வழியாக பார்த்தபோது சமையல் அறையில் பதுங்கியிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து கர்நாடக மாநிலம் பன்னர்கட்டா புலிகள் காப்பகத்திலிருந்து கால்நடை மருத்துவர் டாக்டர் அருண்குமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் மாலையில் வீட்டின் புகைபோக்கி வழியாக துப்பாக்கி மூலம் மயக்க மருந்து ஊசியை செலுத்தினர். அதன்பின்னர் வனத்துறையினர் வீட்டுக்குள் சென்று மயங்கிக் கிடந்த சிறுத்தைப் புலியை மீட்டனர். உடனே தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த கூண்டுக்குள் சிறுத்தைப் புலியை வைத்து தளி அருகே உள்ள உரிகம் அடர்ந்த வனப்பகுதியில் விட எடுத்துச் சென்றனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 10 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மயக்க ஊசி போட்டு சிறுத்தைப் புலி பிடிக்கப்பட்டது. அது 2 வயது ஆண் சிறுத்தைப் புலி. உரிகம் வனப்பகுதியில் மயக்கம் தெளிய வைத்து பின் காட்டிற்குள் விடப்படும் என தெரிவித்தனர்.
சிறுத்தைப் புலியை பிடிக்கும்போது ஒசூர் சார் ஆட்சியர் பிரவீன் பீ நாயர், மாவட்ட வன அலுவலர் உலகநாதன் ஆகியோர் இருந்தனர். துணை காவல் கண்காணிப்பாளர் கோபி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர். சிறுத்தைப் புலியை காண சுற்றுவட்டாரத்தை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடியிருந்தனர்.
கோடை வறட்சி
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒசூரில் ஊருக்குள் புகுந்த சிறுத்தைப் புலியை வனத்துறையினர் மயக்க ஊசி போட்டு பிடித்தனர். வனவிலங்குகள் ஊருக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் தேவை யான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.
வறட்சி நிலவும் காலங்களில் யானை, மான் உள்ளிட்ட வன விலங்குகள் ஊருக்குள் நுழைந்து வந்த நிலையில் தற்போது சிறுத்தைப் புலியும் ஊருக்குள் படையடுப்பதால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.