பெருந்தலைவர் காமராஜரின் 113-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவச் சிலைக்கு அமைச்சர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளின் தலைவர்கள் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சென்னை மெரினா கடற்கரை யில் உள்ள காமராஜர் சிலைக்கு அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், ஆர்.வைத்திலிங்கம், பி.பழனியப்பன், எடப்பாடி பழனிச்சாமி, ராஜேந்திர பாலாஜி, வளர்மதி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தியாகராய நகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லம், அண்ணா சாலை, சத்தியமூர்த்தி பவன் ஆகிய இடங்களில் உள்ள காமராஜர் சிலைகளுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், பொருளாளர் நாசே ராமச்சந்திரன், அகில இந்திய செயலாளர் சு.திருநாவுக்கரசர், செய்தித் தொடர்பாளர் குஷ்பு, முன்னாள் மாநிலத் தலைவர்கள் கே.வீ.தங்கபாலு, எம்.கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். சத்தியமூர்த்தி பவனில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காமராஜரின் உருவப்படத்துக்கும் தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
தியாகராய நகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்ட காமராஜர் உருவப் படத்துக்கு அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
மெரினா கடற்கரையில் உள்ள காமராஜர் சிலைக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பாஜக மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அண்ணா சாலை ஜிம்கானா கிளப் முன்பு வைக்கப்பட்டுள்ள காமராஜர் சிலைக்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திராவிடர் கழக துணைத் தலைவர் கலி பூங்குன்றன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தியாகராய நகர் காமராஜர் நினைவு இல்லத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், துணைத் தலைவர் ஏ.நாராயணன், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன், இந்திய ஜனநாயக கட்சியின் செயல் தலைவர் ரவி பச்சமுத்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நாடார் சமுதாய அமைப்புகள், பல்வேறு வணிகர் சங்கங்கள் சார்பில் சென்னை மாநகரில் பல இடங்களில் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.