முறைகேடு காரணமாக ரத்து செய்யப்பட்ட அகில இந்திய அளவிலான மருத்துவ நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் நேற்று மீண்டும் நடத்தப்பட்டது. சென்னையில் 41 மையங்களில் நடந்த தேர்வில் பாதிக்குப் பாதி மாணவர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
நாடு முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகள், அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களில் 85 சதவீத இடங்கள் மாநில அரசுகளால் நிரப்பப்படுகிறது. எஞ்சிய 15 சதவீத இடங்கள் தேசிய அளவிலான ஒதுக்கீட்டுக்காக மத்திய அரசுக்கு ஒதுக்கப்படுகிறது. இந்த இடங்கள் அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன.
அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு கடந்த மே 3-ம் தேதி நடந்தது. நாடு முழுவதும் சுமார் 6 லட்சத்து 30 ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். தேர்வில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டதால், தேர்வை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் கடந்த ஜூன் 15-ம் தேதி உத்தரவிட்டது. மீண்டும் தேர்வு நடத்த மத்திய பள்ளிக் கல்வி வாரியத்துக்கு (சிபிஎஸ்இ) உத்தரவிட்டப்பட்டது.
இந்நிலையில், சிபிஎஸ்இ சார்பில் மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வு நேற்று நடந்தது. சுமார் 1,000 மையங்களில் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை தேர்வு நடந்தது. சென்னையில் 41 மையங்களில் தேர்வு நடைபெற்றது.
இதுகுறித்து சென்னை மண்டல சிபிஎஸ்இ அதிகாரிகள் கூறியபோது, சென்னையில் 41 மையங்களில் நடந்த தேர்வில் 40 முதல் 50 சதவீத மாணவர்கள் மட்டுமே பங்கேற்றனர். பலர் தேர்வு எழுத வரவில்லை என்றனர்.