தமிழகம்

பேருந்து வசதி இல்லாததால் மாணவ, மாணவிகள் அவதி: தாம்பரம் அருகே அவலம்

செய்திப்பிரிவு

தாம்பரம் அருகே பேருந்து வசதி இல்லாததால் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

தாம்பரம் அருகே அகரம்தென் ஊராட்சியில் அன்னை சத்தியா நகரில் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு சாலை அமைக்கும் பணி முடிந்து பல மாதங்கள் ஆகியும் பேருந்து வசதி இன்னும் தொடங்கப்படவில்லை. இதனால் அன்னை சத்தியா நகரில் வசிப்பவர்கள் தாம்பரம், சேலையூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்ல 4 கிலோமீட்டர் தூரம் நடந்து அகரம்தென் பகுதிக்கு சென்று பேருந்தை பிடிக்கவேண்டி உள்ளது. இதனால் வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக அன்னை சத்தியா நகரில் வசித்து வரும் முரளி கூறும்போது, “எங்கள் ஊருக்கு சாலை வசதி இருந்தும், பேருந்தை இயக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், மாணவர்களும், பொதுமக்களும் சரக்கு வாகனத்தில் ஏறி பயணம் செய்கின்றனர். இதே நிலை நீடித்தால், ஊரை விட்டு செல்வதைத் தவிர வேறு வழியில்லை. எங்கள் ஊருக்கு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

பள்ளிக்கு செல்லும் மாணவி ஒருவர் பேசும்போது, ‘‘பஸ் வசதி இல்லாததால் தினமும் பள்ளிக்குத் தாமதமாக செல்ல வேண்டியுள்ளது. இதனால் எங்கள் படிப்பும் தடைபடுகிறது’’’ என்றார்.

SCROLL FOR NEXT