‘தமிழ்முறைப்படி மருத்துவத் தொழிலில் ஈடுபடும் சித்த மருத்துவர்கள் சுமார் 4 ஆயிரம் பேர் தமிழகத்தில் உள்ளனர். ஆனால், தொழில் செய்வதற்கான பதிவுச் சான்றிதழ் எப்போது கிடைக்கும் என்பது புரியாத புதிராக உள்ளது. இப்பிரச்சினையை அரசு பார்வைக்கு கொண்டு செல்ல வழிவகை செய்யுங்கள்’ என்று ‘தி இந்து’ ‘உங்கள் குரல்’ மூலம் கேட்டுக் கொண்டார் தாராபுரத்தை சேர்ந்த சித்த மருத்துவர் கிருஷ்ணன்.
இவர், தமிழ்ப் பாரம்பரிய சித்த மருத்துவர்கள் ஒருங்கிணைப்பு பாதுகாப்பு இயக்கத்தின் மாநிலச் செயலாளராகவும் உள்ளார். அவர் கூறியதாவது:
1971-ம் ஆண்டு சித்தா, ஆயுர்வேத, யுனானி, ஹோமியோ உள்ளிட்ட மருத்துவ முறைகளை இந்திய மருத்துவக்கழக ஆளுமையின் கீழ் கொண்டு வந்தது அரசு. அப்போதைக்கு இந்த தொழிலில் பரம்பரையாக ஈடுபட்டிருந்த மருத்துவர்கள் சிலர் விண்ணப்பித்து, ஆர்ஐஎம்பி என்ற சான்றிதழை பெற்றுக் கொண்டனர். அதற்குப் பிறகு சித்தா, ஆயுர்வேத மருத்துவர்களுக்கு தொழில் செய்வதற்குரிய அனுமதி வழங்கும் சான்றிதழ் நிறுத்தப்பட்டுவிட்டது.
இந்திய மருத்துவக் கழகத்தின் உறுப்பினர்களே சான்றிதழ்களை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மத்திய அரசு சட்டம் இயற்றினால் ஒழிய அதை கொடுக்க இயலாது என்று அதன் தலைமை அறிவித்துவிட்டது. இதனால் ஒரு சில மாநிலங்களில் உள்ள நாட்டுப்புற மருத்துவர்களுக்கு ‘எல்லீஸ்மென்ட் சான்றிதழ்’ ஒன்றை அந்தந்த அரசுகள் வழங்கின. தமிழ்நாட்டில் இத்தகைய சான்றிதழை 1988-ம் ஆண்டு அளித்தனர். கிராமப்புறங்களில் பரம்பரை பரம்பரையாக வைத்தியம் செய்து வந்த பலருக்கும் இந்த தகவல் எட்டவில்லை. ஒரு சிலருக்கு மட்டுமே சான்றிதழ்கள் கிடைத்தன. சான்றிதழ் இல்லாமல் தமிழ்நாட்டில் தொழில்முறை சித்தா மருத்துவர்கள் 3 ஆயிரம் பேர் முதல் 4 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்கள் பல்வேறு சித்த மருத்துவர் சங்கங்களில் உள்ளனர்.
தமிழக சுகாதாரத் துறை செயலராக சுப்புராஜ் பொறுப்பு வகித்தபோது, பரம்பரை சித்த மருத்துவர்கள் அனைவரின் பெயரும் பதிவு செய்து சான்றிதழ் அளிப்பதாகக் கூறினார்.
1997-ம் ஆண்டு ‘தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம்’ என்ற ஒன்றை அரசு அமைத்தது. அதன் மூலம் சித்த மருத்துவர்கள் நலன் பாதுகாக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
சமீபத்தில் தமிழக சித்த மருத்துவர்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அரசு அதை சித்த மருத்துவ மன்றத்துக்கு அனுப்பி, அங்கிருந்து அரும்பாக்கத்தில் உள்ள இந்திய ஹோமியோபதி மருத்துவகத்துக்கு அனுப்பப்பட்டது. பாரம்பரிய சித்த மருத்துவர்கள் அனைவருக்கும் அங்கிருந்து அடையாள அட்டை வழங்கப்படுவதாக 2 மாதங்களுக்கு முன்பு தகவல் வந்துள்ளது.
எனினும், இதுவரை தமிழகத்தில் எந்த சித்த மருத்துவர்களுக்கும் பதிவு அடையாள அட்டை வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை. அந்தந்த பகுதி விஏஓ, ஆர்ஐ, தாசில்தார் மூலமாக பாரம்பரிய சித்த மருத்துவர்களுக்கு சான்றிதழ் அளிக்கப்பட்டு, அதன் மூலம் ‘சித்த மருத்துவர்’ என்ற பதிவு அட்டையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.