தமிழகம்

கொலை குற்றவாளிகளை வரும் 24-ம் தேதிக்குள் பிடிப்போம்: ராமஜெயம் வழக்கில் சிபிசிஐடி போலீஸார் உறுதி

கல்யாணசுந்தரம்

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராம ஜெயம் கொலை வழக்கில் உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள கெடு முடிய 7 நாட்களே உள்ள நிலையில், வரும் 24-ம் தேதிக்குள் குற்றவாளிகளைப் பிடித்து விடு வோம் என்று உறுதியாகக் கூறு கின்றனர் சிபிசிஐடி போலீஸார்.

திமுகவில் எந்தப் பொறுப்பும் இல்லாத நிலையிலும், கே.என்.நேருவின் வலதுகரம் என்ற வலிமையோடு கட்சியில் வலம் வந்தவர் அவரது தம்பி ராம ஜெயம். இவரை, அடையாளம் தெரியாத கும்பல் கொடூரமான முறையில் கொலை செய்து, திருச்சி-கல்லணை சாலையில் திருவளர்ச்சோலை பகுதியில் முட்புதரில் வீசிச் சென்றது 2012 மார்ச் 29-ல் தெரியவந்தது. இந்தப் படுகொலை அவரது குடும்பத்தினரை மட்டுமன்றி தமிழகத்தையே உலுக்கியது.

இந்த வழக்கை திருச்சி மாநகர காவல் துறையினர் 8 தனிப் படைகள் அமைத்து விசாரித்த னர். நூற்றுக்கணக்கான ரவுடி கள், ஆயிரக்கணக்கான பொதுமக் கள், நேரு குடும்பத்தார், ராம ஜெயத்துடன் நெருக்கமாக இருந் தவர்கள் என ஏராளமானோரிடம் விசாரணை நடத்தப்பட்டும் எவ்வித முன்னேற்றமும் இல்லை.

இதையடுத்து, 2012 ஜூன் மாதத்தில் இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸுக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீஸார் 12 தனிப் படைகளை அமைத்து விசாரித் தனர். அவர் கொலை செய்யப் பட்டு 3 ஆண்டுகள் கடந்த நிலை யிலும், இதுவரை குற்றவாளிகள் சிக்கவில்லை.

இந்நிலையில், இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற உத்தரவிடக் கோரி ராமஜெயத்தின் மனைவி லதா, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் ஜூலை 24-ம் தேதிக்குள் குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டுமென கெடு விதித்து கடந்த ஜூன் 12-ம் தேதி உத்தரவிட்டது.

இதையடுத்து, வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீஸார் தீவிரப்படுத்தியுள் ளனர். ராமஜெயம் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டிருந்ததால், தொழில் போட்டி காரணமாகவும் இந்தக் கொலை நடைபெற்றிருக்க வாய்ப்புள்ளது. எனினும், கொலைக்கான காரணத்தைக் கண்டுபிடிக்க முடியாததால், குற்றவாளிகளைப் பிடிப்பதில் சிரமம் உள்ளதாக சிபிசிஐடி தரப்பில் கூறப்படுகிறது.

உயர் நீதிமன்ற கெடுவுக்கு (ஜூலை 24) இன்னும் 7 தினங்களே உள்ள நிலையில், வழக்கு விசாரணை தொடர்பாக சிபிசிஐடி வட்டாரத்தில் கேட்ட போது, “ராமஜெயம் கொலை வழக்கில் முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. 12 தனிப் படை யினரும் தொய்வின்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயர் நீதிமன்றத்தில் ஜூலை 24-ம் தேதி வழக்கு தொடர்பான அறிக்கை தாக்கல் செய்ய உள்ளோம். நீதிமன்றம் விதித்துள்ள கெடுவுக்கு முன்பாகவே குற்றவாளிகளைப் பிடிக்க தீவிரமாக முயற்சித்து வருகிறோம். மற்றபடி, விசாரணை விவரங்களைத் தெரிவிக்க இய லாது” என்றனர்.

SCROLL FOR NEXT