கல்வி வளர்ச்சி நாளுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
காமராஜரின் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படும் நிலையில், அதைக் கொண்டாடும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்த பெருமை காமராஜரையே சாரும். குழந்தைகள் கல்விக்கு பசி ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக மதிய உணவு திட்டத்தை அறிமுகம் செய்தார். இவரது காலத்தில் தரமான பாடத்திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டு மாணவர்களின் சிந்தனைத் திறன் மேம்படுத்தப்பட்டது.
சென்னையிலுள்ள இந்தியத் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தை (ஐஐடி) கொண்டு வந்தவரும் காமராஜர்தான். ஆனால், தமிழகத்தில் இன்று கல்வியின் தரம் திட்டமிட்டு சீரழிக்கப்பட்டு வருகிறது. தனியார் பள்ளிகள்தான் தரமானவை என்ற மாயத்தோற்றம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்வழிக் கல்வி முடக்கப்பட்டு, சிந்திக்கும் திறனை மழுங்கடிக்கும் ஆங்கில வழிக் கல்வி முறை ஊக்குவிக்கப் படுகிறது.
இந்த நிலை மாற்றப்பட வேண்டும். காமராஜர் விரும்பிய சுகமான, சுமையற்ற, தரமான, விளையாட்டுடன் கூடிய கட்டாயக் கல்வி அனைவருக்கும் இலவசமாக வழங்க வேண்டும்.
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.