ஒன்றரை லட்சம் மாணவ-மாணவிகள் கலந்துகொள்ளும் பொறியியல் பொது கலந்தாய்வு இன்று (புதன் கிழமை) தொடங்குகிறது. இதற்கான விரிவான ஏற்பாடுகள் அண்ணா பல்கலைக்கழகத்தில் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் உள்ள 536 பொறி யியல் கல்லூரிகளில் ஏறத்தாழ 2 லட்சம் பிஇ, பிடெக் இடங்கள் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றைச்சாளர முறையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஒரு லட்சத்து 54 ஆயிரம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித் துள்ளனர். அவர்களின் தரவரிசைப் பட்டியல் ஜூன் 19-ம் தேதி வெளியிடப்பட்டது.
முதல்கட்டமாக விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகிய சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த 28, 29-ம் தேதிகளில் நடந்தது. கலந்தாய்வின் நிறைவில் அவர்களுக்கு உடனடியாக கல்லூரி ஒதுக்கீட்டு ஆணையும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், பொது கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழகத் தில் இன்று (புதன்கிழமை) தொடங்கு கிறது. கலந்தாய்வு தேதி, நேரம் உள்ளிட்ட விவரங்கள் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டபோதே மாணவர்களுக்கு ஆன்லைனில் தெரிவிக்கப்பட்டது. மேலும், கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதமும் சம்பந்தப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு முன்கூட்டியே அனுப்பப்பட்டுவிட்டது. வெளியூர் மாணவர்களுக்கு கலந்தாய்வு நடக்கும் அண்ணா பல்கலைக்கழகத் துக்கு வந்து செல்ல அரசு பஸ்களில் கட்டணச் சலுகை பெறவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
அடிப்படை வசதிகள் தயார்
கலந்தாய்வுக்கு வருகின்ற வெளியூர் மாணவ-மாணவிகளுக்கும் உடன் துணைக்கு வருவோருக்கும் தேவையான அடிப்படை வசதிகளும், கேண்டீன், குடிநீர் வசதி, இளைப்பாற ஓய்வுக் கூடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. கலந்தாய்வின்போது டெபாசிட் செலுத்துவதற்கு வங்கி கவுன்ட்டர்
களும் அருகிலேயே அமைக்கப் பட்டுள்ளன. கல்லூரிகளில் உள்ள காலியிடங்கள் பாடப்பிரிவு மற்றும் இட ஒதுக்கீடு வாரியாக உடனுக்குடன் தெரிந்துகொள்ள காட்சிக்கூட அறையில் (டிஸ்பிளே ஹால்) ராட்சத கணினி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இன்று தொடங்கி ஜூலை 31-ம் தேதி வரை தொடர்ந்து ஒரு மாத காலம் நடைபெறும் பொது கலந்தாய்வில் தினமும் 6 ஆயிரம் பேர் வரை கலந்துகொள்கிறார்கள். கலந்தாய்வு ஒவ்வொரு நாளும் 8 அமர்வுகளாக நடத்தப்பட உள்ளது. தனியார் கல்லூரி நிர்வாகத்தினர் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் விளம்பர நோட்டீஸ்கள் விநி யோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி யாரேனும் துண்டு அறிக்கை அல்லது விளம்பர நோட்டீஸ் விநியோகித்தால் அவர்கள் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப் படுவார்கள் என்று அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்துள்ளது.