தமிழகம்

மவுலிவாக்கம் கட்டிட விபத்து தொடர்பான ரகுபதி கமிஷனின் அறிக்கை பேரவையில் தாக்கல் எப்போது? - அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

மவுலிவாக்கம் கட்டிட விபத்து குறித்து விசாரணை நடத்திய நீதிபதி ரகுபதி கமிஷனின் அறிக்கை சட்டப்பேரவையில் எப்போது தாக்கல் செய்யப்படும் என்பதை தெரிவிக்குமாறு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அருகே மவுலிவாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த 11 மாடி கட்டிடம், கடந்த ஆண்டு ஜூன் 28-ம் தேதி இடிந்து தரைமட்டமானதில் 61 பேர் உயிரிழந்தனர். 27 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு விசாரணையின் போது, மவுலிவாக்கம் கட்டிட விபத்து குறித்து விசாரணை நடத்திய நீதிபதி ரகுபதி கமிஷன், அரசிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து, ‘கமிஷன் அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்துவிட்டு, நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான முதல் அமர்வு உத்தரவிட்டது.

நீதிபதி எச்சரிக்கை

கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, ‘‘நீதிபதி ரகுபதி கமிஷன் அறிக்கையை சட்டப் பேரவையில் தாக்கல் செய்ய மேலும் தாமதம் செய்தால், இவ்வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட நேரிடும்’’ என்று தலைமை நீதிபதி எச்சரித்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மு.க. ஸ்டாலின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜரானார். அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமையாஜி மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அவகாசம் வேண்டும்

‘தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் 5 நாட்கள் மட்டுமே நடந்தது. குறைவான நாட்கள் நடந்ததால் அப்போது நீதிபதி ரகுபதி கமிஷன் அறிக்கை தாக்கல் செய்யப்பட வில்லை. வரும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தகவல் கிடைத்துள்ளது. ஆனால், சட்டப்பேரவை கூட்டத் தொடர் எந்த தேதியில் தொடங்கும் என்ற தகவல் இல்லை. அதுகுறித்து அரசிடம் கேட்டு தெரிவிக்க அவகாசம் வேண்டும்’’ என்று சோமையாஜி கேட்டார்.

இதையடுத்து, “சட்டப்பேரவை கூட்டத் தொடர் எந்த தேதியில் தொடங்கும், எப்போது நீதிபதி ரகுபதி கமிஷன் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்ற விவரத்தை தெரிவிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 23-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

SCROLL FOR NEXT