தமிழகம்

பிரதமர் மோடியுடன் வைகோ சந்திப்பு: 20 தமிழர்கள் கொலை குறித்து சிபிஐ விசாரிக்க கோரிக்கை

செய்திப்பிரிவு

ஆந்திர வனத் துறையினரால் 20 தமிழக தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி பிரதமர் நரேந்திர மோடியிடம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மனு அளித்தார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று பகல் 12 மணிக்கு சந்தித்துப் பேசினார். சுமார் 20 நிமிடங்கள் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. இது தொடர்பாக வைகோ தெரிவித்திருப்பதாவது:

பகல் 12.30 மணிக்கு நாடாளு மன்ற கட்டிடத்தில் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், பகல் 12 மணிக்கே பிரதமர் என்னை அழைத்தார். தன்னை சந்திக்க வந்ததில் மகிழ்ச்சி எனக்கூறி கட்டித்தழுவி வரவேற்றார்.

தினமும் உங்களை விமர்சித்து வருகிறேன். ஆனாலும் நீங்கள் எனது நண்பர். சந்திக்க நேரம் கேட்டவுடன் வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி என தெரிவித்தேன். ‘நீங்கள் உணர்ச்சிமயமானவர். அதனால் தான் ஈழப் பிரச்சினையை அப்படி அணுகுகிறீர்கள்’ என்றார். பின்னர் அவரிடம் சில கோரிக்கைகளை முன்வைத்தேன். அதற்கான மனுவையும் அளித்தேன். ஆந்திர வனத்துறையினரால் தமிழகத்தைச் சேர்ந்த 20 கூலித் தொழிலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என தேசிய மனித உரிமை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. ஆனால், இந்தப் படுகொலைகளை மறைக்கும் முயற்சியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஈடுபட் டுள்ளார். சொந்த நாட்டிலேயே தமிழர்கள் இப்படி கொல்லப்படுவது வேதனை அளிக்கிறது. எனவே, இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தினேன்.

நதி நீர் இணைப்பை செயல்படுத்த வேண்டும், நிலம் கையகப்படுத்துதல் மசோதாவை கைவிட வேண்டும் என வலியுறுத்தினேன். அனைத்தையும் பொறுமையாக கேட்டுக் கொண்ட மோடி, கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். பிரதமர் உடனான சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

சந்திப்பு முடிந்து விடைபெறும் போது, ‘இது உங்கள் வீடு. நீங்கள் எப்போது வேண்டுமானாலும் என்னைச் சந்திக்கலாம்’ என்றார் மோடி. பெரியார் பிறந்த நாளில் மோடி பிறந்ததை நினைவுபடுத்தி அவரிடம் இருந்து விடைபெற்றேன்.

இவ்வாறு வைகோ கூறினார்.

SCROLL FOR NEXT