அமெரிக்க ஆயுத கப்பல் ஊழியர்கள் ஆகஸ்ட் 3-ம் தேதி கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என தூத்துக்குடி முதலாவது நீதித் துறை நடுவர் மன்றம் உத்தர விட்டுள்ளது.
தூத்துக்குடி அருகே இந்திய கடல் எல்லைக்குள் ஆயுதங்களு டன் அத்துமீறி நுழைந்ததாக, அமெரிக்க தனியார் பாதுகாப்பு நிறுவனத்துக்கு சொந்தமான ‘சீமேன் கார்டு ஓகியோ’ என்ற ஆயுத கப்பலை, இந்திய கடலோர காவல் படையினர் கடந்த 2013 அக் டோபர் 12-ம் தேதி சிறைபிடித்தனர்.
இதுதொடர்பாக கியூ பிரிவு போலீஸார் வழக்கு பதிந்து, கப்பலில் இருந்த 10 மாலுமிகள், 25 பயிற்சி பெற்ற பாதுகாவலர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் இந்தியர்கள் 12 பேர், எஸ்தானியர்கள் 14 பேர், இங்கிலாந்து நாட்டினர் 6 பேர், உக்ரைன் நாட்டினர் 3 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.
கப்பலில் இருந்த 35 அதிநவீன துப்பாக்கிகள், 5,680 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இந்த கப்பலுக்கு சட்டவிரோதமாக டீஸல் வழங்கியதாக 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தூத்துக்குடி முதலாவது நீதித்துறை நடுவர்மன்றத்தில் நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்ட அனைவரும் தற்போது ஜாமீனில் உள்ளனர்.
கப்பல் ஊழியர்கள் 35 பேரை ஆயுத வழக்கில் இருந்து விடுதலை செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதை எதிர்த்து கியூ பிரிவு போலீஸார் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அமெரிக்க கப்பல் ஊழியர்களை ஆயுத வழக்கில் இருந்து விடுதலை செய்தது செல்லாது என அண்மையில் தீர்ப்பளித்தது. மேலும், இந்த வழக்கை விசாரணை நீதிமன்றமே 6 மாதத்துக்குள் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அமெரிக்க ஆயுத கப்பல் வழக்கு தூத்துக்குடி முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கப்பல் ஊழியர்கள் யாரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால் வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதித்துறை நடுவர் சாமுவேல் பெஞ்சமின், அன்றைய தினம் அனைவரும் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். இல்லையெனில் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்தார்.
ஜாமீனில் உள்ள கப்பல் ஊழியர் களில் வெளிநாட்டினர் 23 பேரும் சென்னையில் தங்கி உள்ளனர். இந்தியர்கள் 12 பேரும் தங்கள் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.