தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்றதற்காக தேனி ஏட்டு நேற்று சீருடையில் சென்று முடிகாணிக்கை செய்தார். அவரிடம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி வருகிறார்.
தேனி மாவட்டம், சின்னமனூரைச் சேர்ந்தவர் வேல்முருகன்(44). இவர் சின்னமனூர் அருகே உள்ள ஓடைப்பட்டி காவல் நிலையத்தில் ஏட்டுவாகப் பணிபுரிகிறார். இவர் நேற்று காவலர் சீருடை அணிந்து அதிமுக நிர்வாகிகளுடன் ஊர்வலமாகச் சென்று தேனி பழைய பஸ் நிலையம் அருகேயுள்ள வெற்றிக்கொம்பு விநாயகர் கோயிலில் மொட்டை அடித்து முடி காணிக்கை செலு த்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தலைமன்னரில் இருந்து தனுஷ்கோடி வரை கடலில் நீந்திச் சென்றுள்ளேன். அதேபோல் கூடலூர் லோயர்கேம்ப் முல்லை பெரியாற்றில் இருந்து வைகை அணை வரை நீந்திச் சென்று சாதனை செய்துள்ளேன்.
கடந்த 2000-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை முதல்வர் ஜெயலலிதாவின் போலீஸ் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றியுள்ளேன். இதனால் அவர் மீது அதிகமாகப் பற்றும், மரியாதையும் வைத்துள்ளேன்.
சென்னை ஆர்.கே.நகர் சட்டப் பேரவை தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற வேண்டும் என வேண்டிக்கொண்டேன். அவர் வெற்றி பெற்ற அறிவிப்பு நேற்று வெளியானதும் எனது நேர்த்திக் கடனை செலுத்த கோயிலில் மொட்டை எடுத்து முடி காணிக்கை செலுத்தினேன் என்றார்.
இது குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜே.மகேஷிடம் கேட்டபோது, ஏட்டுவிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. அதன் பிறகு மற்ற விவரங்கள் தெரிவிக்கப்படும் என்றார்.