காஸ் அடுப்பு, குளிர்சாதனப் பெட்டி பயன்படுத்தும் சமையலறையில் ஏற்படும் தீவிபத்துகளை தடுப்பது குறித்து திண்டுக்கல் தீயணைப்பு வீரர்கள் தத்ரூபமாக செயல்முறை பயிற்சியை செய்துகாட்டினர்.
தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் பேரிடர் காலத்தில் மீட்புப்பணிகள் குறித்த செயல்விளக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் விபத்து நேரங்களில் தொழிற்சாலை மற்றும் பொது இடங்களில் புகைசூழ்ந்த இடங்களில் இருந்து எவ்வாறு உயிர் தப்புவது குறித்து தீயணைப்பு வீரர்கள் தத்ரூபமாக செயல்விளக்கம் செய்துகாட்டினர்.
சாலை விபத்துகள், இயற்கை சீற்றங்கள் உள்ளிட்ட அவசர நேரங்களில் பாதிக்கப் பட்டவர்களை எவ்வாறு மீட்பது, அவர்களுக்கு முதலுதவி அளித்து பாதுகாப்பாக மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லும் முறைகள் குறித்தும், மின்சார விபத்துகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ளும் முறைகள் குறித்தும், தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு தீயை அணைப்பது என்பது குறித்தும் தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கம் செய்து காட்டினர்.
குறிப்பாக சமையலறையில் காஸ் அடுப்பை பயன்படுத்தும்போது செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் விபத்துகள் குறித்தும், காஸ் அடுப்பை பயன்படுத்தக்கூடிய சமையலறையில் குளிர்சாதன பெட்டியை வைத்து பயன்படுத் துவதால் விபத்துகள் ஏற்பட வழிவகுக்கும் என்பது குறித்த பல்வேறு விழிப்புணர்வு செயல்முறைகள் செய்து காட்டினர்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பொதுமக்கள், ஆட்சியர் அலுவலக அதிகாரிகள், அலுவலர்கள் பார்வையிட்டனர்.
இதில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அருண்சத்யா, தீயணை ப்பு மற்றும் மீட்புப்பணி மாவட்ட அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, நிலைய அலுவலர் புருஷோத்தமன், அரசு அலுவலர்கள், பொது மக்கள் கலந்துகொண்டனர்.