தமிழகம்

விமானிகளின் பெற்றோரிடம் சேகரித்த ரத்த மாதிரிகள் தடயவியல் துறையில் ஒப்படைப்பு

செய்திப்பிரிவு

விபத்துக்குள்ளான ‘டார்னியர்’ விமானத்தில் பயணம் செய்த விமானிகளின் பெற்றோர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகள், நீதிமன்ற உத்தரவின்பேரில் தடயவியல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.

கடலோர காவல்படைக்கு சொந்தமான ‘டார்னியர்’ விமானம், கடந்த மாதம் 8-ம் தேதி ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது காணாமல் போனது. 35 நாட்கள் நடத்தப்பட்ட தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு கடந்த 10-ம் தேதி விமானத்தின் கருப்புப் பெட்டியும், 13-ம் தேதி மனித எலும்புத் துண்டுகள், வாட்ச் மற்றும் பாதுகாப்பு கவசங்கள் ஆகியவை பிச்சாவரம் கடல் பகுதியில் கண்டெடுக்கப்பட்டன.

இந்த மனித எலும்புத் துண்டுகள் விமானத்தில் பயணம் செய்த விமானிகளான எம்.கே.சோனி, சுபாஷ் சுரேஷ் மற்றும் வித்யாசாகர் ஆகியோருடையதா என்பதை கண்டுபிடிக்க தடயவியல் பரிசோதனை நடத்த கடலோர காவல் படை முடிவு செய்தது.

இதையடுத்து, டிஎன்ஏ சோதனைக்காக கடந்த வாரம், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் விமானிகளின் பெற்றோர்களிடம் இருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. நீதிமன்ற அனுமதி பெற்றுதான் தடயவியல் சோதனைக்கு அனுப்ப முடியும் என்பதால், இதுகுறித்து மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் முறைப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், விமானிகளின் பெற்றோர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகளை மீனம்பாக்கம் காவல் நிலையத்துக்கு கடலோர காவல்படை அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். அதை, விமான நிலைய போலீஸார் நேற்று ஆலந்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். ரத்த மாதிரிகளை தமிழ்நாடு தடயவியல் துறைக்கு அனுப்பி வைக்கும்படி நீதிபதி வித்யா உத்தரவிட்டார். இதையடுத்து, அவற்றை தடயவியல் துறையினரிடம் போலீஸார் ஒப்படைத்தனர்.

SCROLL FOR NEXT