தமிழகம்

வளமான தமிழகத்தை உருவாக்க பாமக தலைமையில் புதிய ஆட்சி: கொங்கு மண்டல அரசியல் மாநாட்டில் தீர்மானம்

செய்திப்பிரிவு

தமிழகத்தை வளம் கொழிக்கும் மாநிலமாக ஆக்க பாட்டாளி மக்கள் கட்சியை ஆட்சியில் அமர்த்துவோம் என்று அக்கட்சியின் கொங்கு மண்டல அரசியல் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பாட்டாளி மக்கள் கட்சியின் கொங்கு மண்டல அரசியல் மாநாடு கோவை கொடிசியா அரங்கில் நேற்று இரவு நடைபெற்றது.

பாமக இளைஞர் அணித் தலைவரும் தருமபுரி எம்.பி. யுமான அன்புமணி ராமதாஸை அக்கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவித்து 2016-ல் ஆட்சி மாற்றத்தை முன்வைத்து இந்த அரசியல் மாநாடு நடத்தப் பட்டது. கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தங்கவேல் பாண்டியன் மாநாட்டுக்கு தலைமை தாங்கினார்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தமிழகம் அனைத்துத் துறைகளிலும் செயலிழந்துவிட்டது. தொழில் மற்றும் வணிகத் துறையினரின் குறைகளை களையவோ தமிழக அரசு சிறிதும்கூட அக்கறை காட்டவில்லை. அதன் விளைவு, தொழில் துறையில் -1.3% வளர்ச்சி என்ற அவலநிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டுள்ளது. வேளாண்துறை வளர்ச்சியோ -12.1% என்ற அளவுக்கு வீழ்ச்சி அடைந்து விட்டது. பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

தொழில் வளர்ச்சியை மேம் படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கர்நாடக மாநில முதல்வர் கோவைக்கு வந்து தொழி லதிபர்களை சந்தித்து ரூ.12,000 கோடி முதலீட்டை திரட்டிச் சென்றுள்ளார். தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தொழிற்சாலைகளுக்கு அனுமதி பெறும் உரிமையை அறிவித்து தமது மாநிலத்தில் தொழில் தொடங்க முன்வருமாறு அழைப்பு விடுக்கிறார்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தமிழகத் தொழிலதிபர்களை நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு தொழில் முதலீடு செய்ய அழைக்கிறார்.

ஆனால் தமிழக அரசோ மதுக்கடைகளைதான் திறந்துவைத் துள்ளது.

தமிழகம் என்றாலே பச்சிளம் குழந்தைகள் கூட மது அருந்தும் மாநிலம் என்ற அவப்பெயர் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ளது.

முந்தைய திமுக ஆட்சியிலும் இதேநிலைதான். ஆட்சிக்கு வந்தால் அவிநாசி மற்றும் அத்திக்கடவு நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தை செயல்படுத்துவதாக இரு கட்சிகளும் அறிவித்தன. ஆனால் இதுவரை இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. பாண்டியாறு - புன்னம்புழா திட்டம் இதுவரை கண்டுகொள்ளப்படவில்லை.

கொங்கு மண்டலத்துக்கு தண்ணீர் வழங்கும் பாம்பாற்றின் குறுக்கே அணை கட்டும் கேரளத்தின் திட்டம் தடுக்கப்படவில்லை. காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டும் திட்டம் தடுக்கப்படவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை.

முல்லைப்பெரியாற்றில் புதிய அணை தேவையில்லை என உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்துவிட்ட போதிலும், புதிய அணை கட்டுவதற்கான கேரள அரசின் முயற்சிகளை தடுத்து நிறுத்த முடியவில்லை. மீனவர்கள் மீதான இலங்கை கடற்படை தாக்குதலை தடுக்க நடவடிக்கை இல்லை.

10% ஊரக மக்களுக்குக் கூட நிரந்தரமான வாழ்வாதாரம் அளிக்க முடியாததும், ஏழைகள் அதிகம் வாழும் மாநிலங்களில் தமிழகத்தை முன்னணியில் வைத்திருப்பதும், வேளாண் விளைநிலங்களுக்கு பாசன வசதி செய்து தராததும்தான் திராவிடக் கட்சிகளின் சாதனை ஆகும். தமிழகத்தின் வளர்ச்சிக்காக எண்ணற்றத் திட்டங்களை பாட்டாளி மக்கள் கட்சி ஏற்கெனவே வெளியிட்டுள்ளது.

திராவிட கட்சிகளிடமிருந்து தமிழகத்தை மீட்டெடுத்து வளம் கொழிக்கும் மாநிலமாக மாற்ற பாமகவை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்று மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநாட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞர் அணித் தலைவர் அன்புமணி, வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு எம்.எல்.ஏ., பாமக தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT