டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்களின் தரம் ஆய்வு செய்யப்படுவது குறித்து மனுதாரருக்கு ஒரு மாதத்துக்குள் தெரிவிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை செம்பியத்தைச் சேர்ந்த ஜி.தேவராஜன், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
அரசு நிறுவனமான தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்), தனது கடைகளில் தினசரி மதுபானங்களை விற்று வருகிறது. 14 வகையான மது தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து வாங்கப்படும் மதுபானங் கள், டாஸ்மாக் கடைகளில் விற்கப் படுகின்றன. அதன்மூலம் அரசுக்கு குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கிறது.
கடந்த 2010-ம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் மதுபானங்களின் தரம் குறித்து டாஸ்மாக் நிறுவனத்திடம் கேட்டிருந்தேன். பீர், விஸ்கி, பிராந்தி, ரம் போன்ற மதுபானங் கள் ஆய்வுக் கூடத்தில் பரிசோதிக் கப்பட்டு குடிப்பதற்கு தகுதியானது என்று சான்று பெற்ற பிறகே டாஸ்மாக் கடைகளில் விற்கப்படு வதாக தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, மதுபானங் களில் எந்த வகையான நச்சுத் தன்மை பொருட்கள் உள்ளன, நச்சுத்தன்மை பொருட்களின் அளவுக்கு ஏற்ப மதுபானங்களின் விலை மாறுபடுமா, எத்தனை சதவீதம் நச்சுத்தன்மை பொருட்கள் உள்ளன, மது குடிப்பதால் ஆண் டுக்கு எத்தனை பேர் இறக்கிறார் கள் என்பன போன்ற தகவல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் சென்னை மயிலாப்பூரில் உள்ள தடய அறிவியல் துறையிடம் கேட்டேன். அதற்கு, தங்களிடம் மதுபானங்களின் தரம் குறித்த தகவல் இல்லை என்றும், உயிரிழப்பு குறித்த விவரங்கள் தங்களது ஆவணங்களில் இல்லை என்றும் தெரிவித்தனர்.
தரமணியில் உள்ள மத்திய அரசின் தேசிய பரிசோதனை மைய இயக்குநருக்கு மேற்கண்ட தகவல்களை கேட்டு மனு கொடுத் தேன். அதுபோன்ற பரிசோதனைக் குத் தேவையான தொழில் நுட்பமோ, உபகரணங்களோ இல்லை என்று அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
எந்தெந்த மதுபானங்களில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிக மாக நச்சுத்தன்மை உள்ளது, அதனால் குடிமக்கள் பாதிக்கப்படு வதைத் தடுக்க எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கேட்டு தலைமைச் செய லாளர், உணவுத் துறை அமைச்சர், டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் உள்ளிட்டோருக்கு பல மனுக்கள் கொடுத்தேன். எந்த மனுவுக்கும் பதில் இல்லை.
எனவே, பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக நச்சுத்தன்மை உள்ள மதுபானங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
* பீர், பிராந்தி, விஸ்கி, ரம் போன்ற மதுபானங்களை குடிப் பதற்கு வயது, உடல் ஆரோக்கியம் குறித்தும் எந்த மாதிரியான வேலை செய்பவர்கள் குடிக்கலாம் என்றும் வரையறை உள்ளதா?
* மதுபானங்களைக் குடிக்க பெண்களுக்கு தகுதி இருக்கிறதா? மது குடிப்பதால் என்ன பயன்?
* நுகர்வோர் குறிப்பிட்ட அளவு தான் மது குடிக்க வேண்டும் என்று நிரந்தர அளவு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறதா
* குடிக்கும் வாடிக்கையாளர் களுக்காக டாஸ்மாக் நிறுவனம் காப்பீடு செய்வதுண்டா?
* மதுவில் என்னென்ன வேதிப் பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன?
* மது பாட்டில்களில் காலாவதி யாகும் தேதி போன்ற தகவல்கள் இடம்பெற்றுள்ளதா? என்பன போன்ற கேள்விகளுக்கு அரசு பதில் அளிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட் டுள்ளது.
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோரைக் கொண்ட முதல் அமர்வு இவ்வழக்கை நேற்று விசாரித்து பிறப்பித்த உத்தரவு:
டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்களின் தரம் குறித்து அறிவதற்காக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் மனுதாரர் சில தகவல்களைக் கோரியுள்ளார். 2010, 2012, 2013, 2015-ம் ஆண்டுகளில் சம்பந்தப்பட்டவர்களுக்கு பல மனுக்கள் கொடுத்திருக்கிறார்.
டாஸ்மாக் மதுபானங்களின் தரம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் முன்பு, தற்போதைய நிலை என்ன என்பதை சரிபார்க்க வேண்டும். அதற்கான முயற்சியை மனுதாரர் மேற்கொள்ளவில்லை. கடந்த மாதம் மற்றொரு மனு அனுப்பியுள்ளார். அது அரசுக்கு போய்ச் சேர்ந்து 10 நாட்கள்தான் இருக்கும். இந்த மனுகூட பொதுவானதாகத்தான் இருக்கிறது. எனவே, இம்மனுவை பொதுநல மனுவாக அனுமதிக்க நாங்கள் விரும்பவில்லை. மனுவை தள்ளுபடி செய்கிறோம்.
இருந்தாலும், டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்களின் தரம் பரிசோதிக்கப்படுவது குறித்து மனுதாரருக்கு ஒரு மாதத்துக்குள் டாஸ்மாக் நிறுவனம் தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.