ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர் தலில் வெற்றி பெற்ற முதல்வர் ஜெயலலிதா, எம்எல்ஏவாக நேற்று பதவியேற்றார்.
சென்னை ஆர்.கே.நகர் சட்டப் பேரவை தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா 1.50 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். கடந்த 30-ம் தேதி தேர்தல் முடிவு வெளியானதுமே, அவர் எம்எல்ஏவாக பதவியேற்பார் என கூறப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் அந்நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
வரவேற்பு
இந்நிலையில், நேற்று காலை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவைத் தலைவர் அறை யில் ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏவாக ஜெயலலிதா பதவியேற்றுக்கொண்டார். இதற் காக, காலை 10.40 மணிக்கு போயஸ் தோட்டம் வீட்டில் இருந்து புறப்பட்டு தலைமைச் செயலகம் வந்த முதல்வரை டிஜிபி அசோக்குமார், சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ், முதல்வர் தனிப்பிரிவு செயலர் இன்னசன்ட் திவ்யா உள்ளிட்டோர் வரவேற்றனர். 11 மணிக்கு சட்டப் பேரவை தலைவர் பி.தனபால் அறைக்கு சென்ற முதல்வர், ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை அவரிடம் வழங்கினார்.
அதைத் தொடர்ந்து 11.01 மணிக்கு பேரவைத் தலைவர் முன்பு, எம்எல்ஏவாக பதவியேற் றார். பதவியேற்பு உறுதி மொழியை படித்து, பதிவேட் டிலும் கையெழுத்திட்டார். இந் நிகழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 28 அமைச்சர்கள், மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை, சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், கொறடா மனோகரன், பேரவைச் செயலாளர் ஜமாலுதீன் ஆகியோர் பங்கேற்றனர்.
பதவியேற்பு முடிந்ததும், முதல்வர் ஜெயலலிதா தனது அறைக்கு சென்றார். அங்கு முதல் வர் முன்னிலையில் சூரிய சக்தி மின் உற்பத்தி தொடர்பாக அதானி குழுமத்துடன் ஒப்பந்தம் கையெழுத் தானது. 11.23 மணிக்கு முதல்வர் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.
கொடநாடு பயணம் ரத்து
எம்எல்ஏவாக பதவியேற்றதும், முதல்வர் ஜெயலலிதா கொடநாடு செல்வதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக, போயஸ் தோட்டம் முதல் விமான நிலையம் வரை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விமான நிலையம் செல்லும் வழியில் ஆளுநர் ரோசய்யாவை சந்தித்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பார் என்றும் கூறப்பட்டது.
நாளை பயணம்?
ஆனால், நேற்று காலையே ஆளுநருக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துச் செய்தி அனுப்பிவிட்டார். அதனால், அவர்களது சந்திப்பு ரத்தானது. அதேபோல, கொடநாடு பயணத்தையும் ஜெயலலிதா திடீரென ரத்து செய்துவிட்டார். இதனால் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டது. அதே நேரம், அவர் நாளை கொடநாடு செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.