சென்னையில் இருந்து கர்நாடகாவுக்கு நேற்று மீண்டும் கர்நாடக அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.
சொத்து குவிப்பு வழக்கில், தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக கர்நாடக அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து பயணிகளின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு, தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்குச் செல்லும் கர்நாடக அரசு பஸ்கள் சென்னையில் நேற்று முன்தினம் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில் நேற்று பிற்பகல் 3 மணி முதல் கர்நாடக அரசு பஸ்கள் மீண்டும் இயக்கப்பட்டன. இதுகுறித்து கர்நாடக அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறியதாவது:
அரசு பஸ்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நேற்று முன்தினம் பஸ்களை பணிமனைகளில் நிறுத்திவைத்துவிட்டோம். நேற்று பிற்பகல் 3 மணி முதல் தமிழகத்தின் எல்லையோர பகுதிகளில் இருந்து கர்நாடகாவுக்குச் செல்லும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. அதேபோல், சென்னை கோயம்பேட் டில் இருந்து இயக்கப்படும் 51 அரசு பஸ்களும் மீண்டும் இயக்கப் பட்டன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.