பள்ளிபாளையம் அருகே காவிரி ஆற்று நீரில் மூழ்கி பொள்ளாச்சி மற்றும் பல்லடத்தைச் சேர்ந்த இருவர் பலியாகினர். மற்றொருவரைத் தேடி வருகின்றனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியைச் சேர்ந்த பேக்கரி கடை ஊழியர் அப்துல் காதர் மகன் முகமது யாசர் (17). பிளஸ் 2 முடித்திருந்த இவர் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் சேர முடிவு செய்திருந்தார். இதற்காக நேற்று நடந்த நுழைவுத்தேர்வில் பங்கேற்க தனது தந்தை அப்துல் காதர், மற்றும் திருப்பூர் மாவட்டம், பல்லடத்தைச் சேர்ந்த உறவினர்கள் உமர்பர்சீத் (24), முகமது ஆசாத் (16) ஆகியோருடன் காரில் திருச்செங்கோடு வந்தார்.
நுழைவுத்தேர்வு முடிந்த பின்னர் முகமது யாசர் உள்ளிட்ட 4 பேரும் கொக்கராயன்பேட்டை காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றனர். அப்போது ஆழமான பகுதியில் 4 பேரும் சிக்கி, நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இதில், முகமது யாசர் மட்டும் தப்பி கரையேறினார். அப்துல்காதர் உள்ளிட்ட மூவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். தகவல் அறிந்த திருச்செங்கோடு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் நீரில் அடித்து செல்லப்பட்ட உமர்பர்சீத், முகமது ஆசாத் ஆகியோரது பிரேதத்தை மீட்டனர். அப்துல் காதரைத் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
உயிரிழந்த உமர்பர்சீத்தின் தந்தை ஷாஜகான், கிருஷ்ணகிரி மாவட்ட தீயணைப்புத் துறையில் அலுவலராக பணி புரிகிறார். முகமது ஆசாத் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தார். இதுகுறித்து மொளசி போலீஸார் விசாரிக்கின்றனர்.