தாம்பரத்தில் ஒரே இரவில் 7 கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
தாம்பரம் காவல் நிலையம் அருகே முத்துலிங்கரெட்டி தெருவில் ரியல் எஸ்டேட், பூச்சி மருந்து கடை உள்ளிட்ட ஏராளமான கடைகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் கடைகளை பூட்டிவிட்டு சென்ற உரிமையாளர்கள் நேற்று காலை கடைகளை திறக்க வந்தபோது 7 கடைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தன. கடைகளில் இருந்த நகைகள், பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன.
இது தொடர்பாக கடைகளின் உரிமையாளர்கள் தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்களுடன் வந்த போலீசார் கடைகளில் பதிவாகியிருந்த ரேகைகளை ஆய்வு செய்தனர். இந்த கொள்ளை சம்பவம் பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.