தமிழகம்

நடிகர் சங்கத்தில் இருந்து நாடக நடிகர்களை நீக்கச் சொல்வதா?- மன்சூர் அலிகானுக்கு நடிகர் சங்கம் கண்டனம்

செய்திப்பிரிவு

நடிகர் சங்கத்தில் இருந்து நாடக நடிகர்களை நீக்கச் சொல்வதா என்று மன்சூர் அலிகானுக்கு நாடக நடிகர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக சரத்குமார், ராதாரவி அணிக்கும், நாசர், விஷால் அணிக்கும் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தமிழ்நாடு நாடக நடிகர் சங்க உறுப்பினர்களில் சுமார் 170 பேருக்கு, தென்னிந்திய நாடக நடிகர் சங்கத்தில் வாக்களிக்கும் உரிமை உள்ளது. எனவே, அவர்களது ஆதரவைக் கேட்டு நடிகர் ராதாரவி உள்ளிட்டோர் சமீபத்தில் மதுரை வந்திருந்தனர்.

இந்த நிலையில், மதுரை தமிழ்நாடு நாடகர் நடிகர் சங்க துணைத் தலைவர் எம்.எஸ்.வி.கலைமணி `தி இந்து’ செய்தியாளரிடம் நேற்று கூறியது: நடிகர் சங்க தேர்தல் வரவுள்ள சூழலில், நாடக நடிகர்களை தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று மன்சூர் அலிகான் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

சினிமாவுக்கு நாடகம்தான் முன்னோடி. அறிஞர் அண்ணா முதல் எம்ஜிஆர், சிவாஜி வரையில் பலர் நாடகத் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர்கள்தான். மதுரையில் நாடக நடிகர் சங்கம் உருவாகவும் எம்ஜிஆர் உறுதுணையாக இருந்தார்.

ஊமைப்படங்களாக இருந்த தமிழ் சினிமா, சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகங்களைத் தழுவித்தான் பாடலும், வசனமும் உள்ள சினிமாவாக மாறியது. நாடக நடிகர்களின் புகழ் வெளிச்சத்தை வைத்துத்தான் ஒரு காலத்தில் சினிமாவும் வளர்ந்தது. வியர்வை சிந்தி உழைத்த எங்களை வெளியேற்றச் சொல்லும் மன்சூர் அலிகானை கண்டிக்கிறோம் என்றார்.

இந்தத் தேர்தலில் ராதாரவி, விஷால் இருவரில் யாரை ஆதரிப்பீர்கள் என்று கேட்டபோது, ராதாரவி நாடக நடிகர் குடும்பத்தில் இருந்து வந்தவர். எங்களுக்குப் பிரச்சினை என்றால் தேடிவந்து உதவி செய்பவர். இதைப்போல விஷாலை நாங்கள் சந்திக்க முடியுமா என்றார்.

SCROLL FOR NEXT