நோக்கியா செல்போன் தொழிற்சாலையில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பாக அதிமுக அரசு மீதும், சிஐடியு தொழிற்சங்கத்தின் மீதும் தொமுச பேரவை பொதுச் செயலாளர் மு.சண்முகம் புகார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 2005ம் ஆண்டில் தொடங்கப்பட்ட நோக்கியாவில் 8,500 நிரந்தர ஊழியர்களும், 6,000 பயிற்சியாளர்களும், 6,000 ஒப்பந்தத் தொழிலாளர்களும் பணியாற்றினர். இதனுடைய சார்பு நிறுவனம் பாக்ஸ்கான், பெரலஸ் ஆகிய நிறுவனங்களில் 7,000 பேர் பணியாற்றி வருகிறார்கள்.
இந்நிலையில் உலகமெங்குமுள்ள நோக்கியா நிறுவனங்களை வாங்கிய மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் நோக்கியா செலுத்த வேண்டிய வரிப் பாக்கியை செலுத்துமாறு கூறி கடிதம் கொடுக்கப்பட்டது. இதனை நிராகரித்த மைக்ரோசாப்ட் நிறுவனம், இந்த பிரச்சினையை தீர்த்து கொடுத்தால்தான் இந்தியாவிலுள்ள உங்கள் நிறுவனத்தை ஏற்றுகொள்வோமென நோக்கியாவிடம் கூறி இந்நிறுவனத்தை கைவிட்டது.
இந்தியாவிலுள்ள நிறுவனத்தை மூட முடிவெடுத்த நோக்கியா, படிப்படியாக ஊழியர்களை வெளியேற்றி வருகிறது. உள்நாட் டில் உற்பத்தியாகிய நோக்கியா கைபேசியை குறைந்த விலையில் வாங்கியவர்கள் , இனி அயல்நாட்டு கைபேசியை அதிக விலைக்கு வாங்க வேண்டிய கட்டாயமான நிலையை அ.தி.மு.க. அரசும் நோக்கியா தொழிற்சாலையின் உள்ள சிஐடியு தொழிற்சங்கமும் ஏற்படுத்தியுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.