தமிழகம்

சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் மதுவிலக்கு கோரும் கட்சிகளை ஓரணியில் திரட்டுவேன்: காந்தியவாதி சசிபெருமாள் உறுதி

எம்.மணிகண்டன்

சட்டப்பேரவை பொதுத்தேர்தலின் போது மதுவிலக்கு கோரும் கட்சிகளை ஓரணியில் திரட்டுவேன் என்று காந்தியவாதி சசிபெருமாள் கூறினார்.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ள மது ஒழிப்பு ஆர்வலரும் காந்தியவாதியுமான சசிபெருமாள், ‘தி இந்து’வுக்கு அளித்த பேட்டி:

இடைத்தேர்தலில் போட்டியிடுவ தால் மது ஒழிப்பு சாத்தியமாகிவிடுமா?

வெற்றி பெறவேண்டும் என்பதற் காக இடைத்தேர்தலில் போட்டியிட வில்லை. மதுவிலக்கு வேண்டும் என்ற கருத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கவே இந்த முயற்சி. இடைத் தேர்தலை எங்களது பிரச்சாரக் களமாக பயன்படுத்துகிறோம். மதுவிலக்கு கொண்டு வருவதாக அரசு உறுதியளித்தால், நாங்கள் விலகிவிடுவோம். அனைத்து டாஸ்மாக் கடைகளையும் அம்மா உணவகமாகவும், நூலகமாகவும் மாற்ற வேண்டும்.

அத்தனை அமைச்சர்களும் பிரச் சாரம் செய்யும் இடத்தில் உங்கள் பிரச்சாரம் எடுபடுமா?

நிச்சயம் எடுபடும். நாங்கள் வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்திப்போம். இதற்காக சமூக ஆர் வலர்கள் பலர் ஆர்.கே.நகரில் முகாமிட உள்ளனர். அரியலூர், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் மே 1-ம் தேதி நடந்த மது ஒழிப்பு பிரச்சாரப் பயணத்தின்போதே இதை முடிவு செய்துவிட்டோம்.

மது ஒழிப்பை வலியுறுத்தும் அரசி யல் கட்சிகளுடன் இணைந்து இடைத் தேர்தலை சந்தித்திருக்கலாமே?

மது ஒழிப்பை வலியுறுத்தும் பாமக, மதிமுக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் இடைத்தேர்தலை புறக் கணிப்பதாக அறிவித்துவிட்டன. இந்நிலையில், அவர்களது முடிவில் தலையிடுவது நாகரிகம் ஆகாது என்பதால் நாங்களே போட்டியிடு கிறோம். ஒருவேளை எனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டால், டிராபிக் ராமசாமியை ஆதரிப்போம். சட்டப் பேரவை பொதுத்தேர்தலின்போது மதுவிலக்கை வலியுறுத்தும் கட்சிகளையும் இயக்கங்களையும் ஓரணியில் திரட்டுவேன்.

இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளரை ஆதரிக்காதது ஏன்?

அடிமைப்பட்டிருக்கும் பாட் டாளி வர்க்கத்தினரை மீட்பது தான் பொதுவுடைமை. ஆனால், மதுபானத்துக்கு அடிமைப்பட்டுள் ளவர்களை மீட்க கம்யூனிஸ்ட் கட்சிகள் முயற்சி எடுக்கவில்லை. மதுவிலக்கு விஷயத்தில் கம்யூ னிஸ்ட்கள் தமிழகத்தில் வலுவாக குரல் கொடுப்பதில்லை.

மது குடிப்போர் சங்கத்தினரும் தேர்தலில் போட்டியிடுகிறார்களே?

அந்த சங்கத்தின் தலைவர் செல் லப்பாண்டியன், மது விற்பனைக்கு ஆதரவானவர் அல்ல. தனது கருத்தை நையாண்டியான தோர ணையில் கூறி வருகிறார். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம். இவ்வாறு சசிபெருமாள் கூறினார்.

SCROLL FOR NEXT