மீஞ்சூர் அருகே உள்ளது வாய லூர் ஊராட்சிக்குட்பட்ட ஊரணம் பேடு கிராமம். இக்கிராமத்தில், ஏற்கெனவே வடசென்னை அனல் மின் நிலையத்தின் பயன்பாட்டுக் காக பொதுமக்களிடம் இருந்து 287 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப் பட்டது. அந்த நிலத்தின் ஒரு பகுதியில் வடசென்னை அனல் மின் நிலையத்திலிருந்து வெளி யேற்றப்படும் சாம்பல் கழிவுகள் கொட்டும் குளம் அமைக்கப்பட்டுள் ளது.
அதே நிலத்தின் மற்றொரு பகுதி மற்றும் அரசுக்குச் சொந்தமான நிலத்தில், தலா 660 மெகா வாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் இரு அலகுகள் கொண்ட எண்ணூர் சிறப்புப் பொருளாதார மண்டல அனல் மின் நிலையம் அமைக்க அரசு ஏற்கெனவே திட்ட மிட்டிருந்தது. அதன்படி, நிலத்தை சமப்படுத்தும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
‘ஏற்கெனவே வடசென்னை அனல் மின் நிலையத்தால் விவசா யம் மற்றும் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்துள்ளோம். எனவே, புதி தாக அமைக்கப்படும் அனல் மின் நிலையத்தில் நிரந்தர வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும். அனல் மின் நிலைய கட்டுமானத்தில் சிறிய அளவிலான ஒப்பந்தங்கள் மற்றும் கட்டுமானப் பணிகளை தங்களுக்கு அளிக்க வேண்டும்’ என்று வாயலூர் ஊராட்சி பகுதி களைச் சேர்ந்த கிராம மக்கள் அரசு அதிகாரிகளிடம் வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில், வாயலூர் ஊராட்சிக்குட்பட்ட ஊரணம்பேடு, செங்கழநீர்மேடு, ராஜாந்தோப்பு, கொக்குமேடு, ராமநாதபுரம், வாயலூர், வாயலூர் குப்பம் ஆகிய 7 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட் டோர், நேற்று வேலைவாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி, ஊரணம்பேட்டில் அனல் மின் நிலையப் பணி நடைபெற்று வரும் இடத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் போலீஸார் குவிக்கப்பட்டனர். பொன்னேரி வட்டாட்சியர் தமிழ்ச் செல்வி பேச்சுவார்த்தை நடத்தினார். கோரிக்கைகள் தொடர்பாக வருகிற 20-ம் தேதி பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில், சிறப்புப் பொருளாதார மண்டல அனல் மின் நிலைய அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கும் கூட்டம் நடத்தி உரிய தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.