தமிழகம்

பயணியை தாக்கியதால் கோபம்: மின்சார ரயில் ஓட்டுநரை கண்டித்து தாம்பரத்தில் பயணிகள் மறியல்

செய்திப்பிரிவு

தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணியை தாக்கிய மின்சார ரயில் ஓட்டுநரைக் கண்டித்து சக பயணிகள் மறியலில் ஈடுபட்டனர்.

சென்னை குரோம்பேட்டை குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் விஜய் சீனிவாசன் (50). திருவனந்தபுரம் சென்றுவிட்டு நேற்று காலை 8.10 மணிக்கு அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் தாம்பரம் வந்தார். அப்போது செங்கல்பட்டில் இருந்து கடற்கரை செல்லும் துரித மின்சார ரயில், சிறிது நேரத்தில் 5 வது நடை மேடைக்கு வரும் என்று அறிவிக் கப்பட்டது. விஜய் சீனிவாசனும் 5-வது நடைமேடையில் அந்த ரயிலுக்காக காத்திருந்தார்.

மின்சார ரயில் வந்ததும், அதன் ஓட்டுநர் சார்லஸ் அருகே சென்று, ‘குரோம்பேட்டையில் இந்த ரயில் நிற்குமா?’ என்று கேட்டார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஓட்டுநர் சார்லஸ், விஜய் சீனிவாசனின் முகத் தில் குத்தி அவரை கீழே தள்ளி விட்டுள்ளார். இதைப் பார்த்த சக பயணிகள் ஓடிவந்து சீனிவாசனை தூக்கிவிட்டனர். பின்னர், அவருக்கு ஆதரவாக சார்லஸிடம் சண்டை போட்டனர். சார்லஸ் மன்னிப்பு கேட்கும்வரை ரயிலை இயக்க விடமாட்டோம் என கூறி மறியலில் ஈடுபட்டனர். ஆனால் சார்லஸ் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார்.

தகவலறிந்து வந்த போலீஸார், ஓட்டுநர் சார்லஸ் மீது நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர். அதைத் தொடர்ந்து பயணிகள் மறியலை கைவிட்டு ரயிலில் ஏறினர். பின்னர் சார்லஸ் மீது தாம்பரம் ரயில் நிலைய போலீஸில் விஜய் சீனிவாசன் புகார் கொடுத்தார். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தால் சுமார் அரை மணி நேரம் தாமதமாக துரித மின்சார ரயில் கடற்கரைக்கு புறப்பட்டுச் சென்றது.

SCROLL FOR NEXT