தமிழகம்

திருமணம் முடித்த 6 மாதத்தில் கணவனைக் கொன்ற மனைவி உட்பட 4 பேருக்கு ஆயுள்

செய்திப்பிரிவு

கணவனைக் கொன்ற மனைவி அவ ரது நண்பர் உட்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

ஆவடி பஜார் நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் அசோக் குமார்(25). இவர் அமைந்தகரையில் சைக்கிள் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் விழுப்புரத்தைச் சேர்ந்த ரேகா ஸ்வீட்டி(21) என்பவருக்கும் கடந்த 2009 ஏப்ரலில் திருமணம் நடந்தது. இருவரும் ஆவடியில் வசித்து வந்தனர்.

திருமணத்துக்கு முன் காதலித்து வந்த வேலூர் பகுதியைச் சேர்ந்த சையது ஆசிம்(26) என்பவருடன் இருந்த பழக்கத்தை திருமணத் துக்குப் பிறகும் ரேகா ஸ்வீட்டி தொடர்ந்துள்ளார்.

ஒருகட்டத்தில் அசோக்குமாரை கொலை செய்ய இருவரும் திட்டம் போட்டனர். இதன்படி, திருமணம் முடிந்த அதே ஆண்டில் நவம்பர் 26-ம் தேதி தூக்க மாத்திரை கலந்த பாலை அசோக்குமாருக்கு கொடுத்து குடிக்க வைத்ததில் அவர் மயங்கினார். பின்னர் அங்கு வந்த சையது ஆசிம், அவரது நண்பர்களான விழுப்புரத்தைச் சேர்ந்த வினோத்(23), ஆற்காட்டைச் சேர்ந்த ஜீனைத் பாஷா(23) ஆகியோர் ரேகா ஸ்வீட்டியுடன் சேர்ந்து கட்டையால் அடித்துக் அசோக்குமாரை கொலை செய்தனர். அதன்பிறகு சடலத்தை காரில் ஏற்றி சித்தூர் காட்டுப் பகுதியில் வீசினர்.

இதுகுறித்து ஆவடி போலீஸார் விசாரணை நடத்தி 4 பேர் மீது வழக்கு பதிந்தனர். இது தொடர் பான வழக்கு பூந்தமல்லி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம்- 3ல் நடந்து வந்தது. இதில் நால்வர் மீதும் குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து ரேகா ஸ்வீட்டி, சையது ஆசிம், வினோத், ஜீனைத் பாஷா ஆகிய 4 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி மகாலட்சுமி உத்தரவிட்டார். மேலும் அபராத தொகையை செலுத்த தவறினால் நான்கு பேரும் கூடுதலாக தலா 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் நீதிபதி தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT