புதுச்சேரியில் சாராயக்கடையை இடமாற்றம் செய்யக்கோரி பலகட்ட போராட்டம் நடத்தியும் அரசு நடவடிக்கை எடுக்காததால், இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தைச் சேர்ந்த பெண்கள் சாராயக்கடையை இன்று அடித்து நொறுக்கினர்.
புதுச்சேரி கவுண்டன்பாளையம் வழுதாவூர் சாலையில் குடியிருப்புகள் மத்தியில் சாராயக்கடை உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். கடையை மாற்றக்கோரி கலால்துறை தொடங்கி அரசு தரப்பில் மனு தரப்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இக்கடையை அகற்றக்கோரி உண்ணாவிரதம், கலால்துறை முற்றுகை உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள சாராயக்கடைகளுக்கு ஆன்-லைன் மூலம் கடந்த 18ம் தேதி முதல் ஏலம் நடைபெற்று வருகிறது. இக்கடைக்கு எதிர்ப்பு இருப்பதால் அந்த கடையை ஏலம் எடுக்க யாரும் முன்வரவில்லை.
கவுண்டம்பாளையம் சாராயக்கடை ஏலம் விட இன்று ஏற்பாடுகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதனை, அறிந்த இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் தட்டாஞ்சாவடி தொகுதி தலைவர் சுமதி தலைமையில், மாநில தலைவர் சரளா, செயலாளர் ஹேமலதா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நிர்வாகக்குழு உறுப்பினர் சேது செல்வம் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்டோர் அக்கடைக்கு சென்றனர். அதில் ஏராளமானோர் பெண்களாக இருந்தனர்.
கவுண்டன்பாளையம் சாராயக்கடைக்கு முன்பாக கடையை அகற்றுமாறு கோஷம் எழுப்பினர், திடீரென சாராயக்கடையினுள் நுழைந்த அவர்கள் அங்கிருந்த சாராய பாட்டில்கள், சாராய கேன்களை அடித்து நொறுக்கி, கடையை சூறையாடினர். கடையில் கேன்களில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த சாராயத்தை எடுத்து வந்து வழுதாவூர் சாலையில் ஊற்றி மறியலில் ஈடுபட்டனர்.
கோரிமேடு போலீஸார் இதுதொடர்பாக விசாரித்து வருகின்றனர். இக்கடையை ஆளுங்கட்சி எம்எல்ஏவின் சகோதரர் கடந்த ஆண்டு ஏலம் எடுத்து தற்போது வரை நடத்தி வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.