திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா இன்று (ஜூன் 1) நடைபெறு கிறது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
திருச்செந்தூரில் முருகப் பெருமானின் ஜென்ம நட்சத்திர திருவிழாவான வைகாசி விசாகத் திருவிழா வசந்த விழாவாக கடந்த மே 23-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு கோயில் நடை அதிகாலை ஒரு மணிக்கு திறக்கப்படுகிறது.
1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும். மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெறும்.
இதையடுத்து, விழாவின் முக்கிய நிகழ்வான முனி குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவம் நடைபெறுகிறது. பின்னர், மகா தீபாராதனை நடைபெற்று, தங்கச் சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி வீதி வலம் வந்து திருக்கோயில் சேர்கிறார்.
விழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர். பாதுகாப்புப் பணியில் கூடுதலான போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் ப.தா. கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் (பொ) ஆர். பொன் சுவாமிநாதன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.