மேல்மருவத்தூர் அருகே அரசு நிலத்தில் போடப்பட்டிருந்த குடிசைகளை செய்யூர் வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று அகற்றினர். இதனால் போலீஸாருக்கும் மக்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மேல்மருவத்தூர் அடுத்த சோத்துப்பாக்கம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான 1.15 ஏக்கர் நத்தம் புறம்போக்கு நிலம் உள்ளது. இதில் சோத்துப் பாக்கம் காலனி பகுதியைச் சேரந்த சிலர் 65-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் அமைத்து வசித்து வந்தனர். இதையடுத்து குடிசை களை அகற்ற செய்யூர் வருவாய்த்துறையினர் உத்தரவிட்டனர் இருப்பினும் குடிசைகள் அகற்றப்படாததால் செய்யூர் வருவாய்த்துறை அதிகாரிகள், மேல்மருவத்தூர் போலீஸார் துணையுடன் நேற்று குடிசை களை அகற்றினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஆர்ப் பாட்டம் செய்தனர். சிலர் மண்ணெண்ணையை உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர். போலீஸார் அவர்களை அப்புறப்படுத்தினர். இதனால் இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர், ஆக்கிரமிப்புகளை அகற்றி இந்த நிலம் அரசுக்கு சொந்தமானது என அதிகாரிகள் அறிவிப்புப் பலகை வைத்தனர்.