தமிழகம்

நீலகிரியில் தொடரும் கன மழை: வீடுகளுக்குள் வெள்ளம்

செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன், 5-வது நாளாக கனமழை பெய்து வருவதால், கடும் குளிர் நிலவுகிறது. ஆங்காங்கே, மின்கம்பங்கள் மீது மரங்கள் விழுந்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சில இடங்களில் மின் விநியோகம் சீரடைந்துள்ளது.

உதகை, குந்தா வட்டங்களில் மழை சற்று குறைந்துள்ள நிலை யில், கூடலூர், பந்தலூர் வட்டங்களில் தீவிரமடைந் துள்ளது. கூடலூர் வட்டத்துக்கு உட்பட்ட மண்வயல், காசிம்வயல், மங்குலி, வேடன்வயல், யானை செத்த புள்ளி ஆகிய தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக் கெடுத்து ஓடுகிறது. இதனால் விளைநிலங்களிலும், 50-க்கும் மேற்பட்ட வீடுகளிலும் வெள்ளம் புகுந்துள்ளது.

பாண்டியாறு - புன்னம்புழா ஆற்றின் கிளை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வயல்கள் மற்றும் குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்தது. இப் பகுதி களை கோட்டாட்சியர் விஜயபாபு மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

மலை ரயில் பாதையில் விழுந்த மரங்களை அகற்றும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சீரமைப்புப் பணிகள் முடிவடைந்து, காலநிலையும் மாறினால் குன்னூர் உதகை இடையே இன்று மீண்டும் ரயில் சேவை தொடங்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்று காலை நிலவரப்படி, மாவட்டத்தில் 1110.60 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

SCROLL FOR NEXT