டிப்ளமோ, பி.எஸ்சி., படித்தவர் களுக்கு பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கான மாநில அளவிலான கலந்தாய்வு காரைக்குடி அழகப்பா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் வரும் 26-ம் தேதி தொடங்குகிறது.
இது குறித்து கலந்தாய்வு செயலாளரும், அழகப்பா பொறியியல் கல்லூரி முதல்வருமான அ. மாலா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் 533 பொறியியல் கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்காக 1 லட்சத்து 16 ஆயிரத்து 234 இடங்கள் காலியாக உள்ளன. இதற்காக தமிழகம் முழுவதும் 34 மையங்களில் மே 12-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. இதில் 19 ஆயிரத்து 629 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
தற்போது www.accet.co.in என்கிற கல்லூரி இணையதளத்தில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. மாணவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 26-ம் தேதி தொடங்கி ஜூலை 9-ம் தேதி மாலை நிறைவடைகிறது. கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும். பி.எஸ்சி., கணிதம் படித்தவர்கள் மட்டுமின்றி, இந்த ஆண்டு பி.எஸ்சி-யில் கணிதம் படிக்காதவர்கள் பிளஸ் 2-வில் கணிதம் படித்திருந்தால் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் என்றார்.