ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் செல்வதால் பலர் தங்களது விலைமதிப்பற்ற உயிரை இழக்கின்றனர். தங்களை மட்டுமின்றி, குடும்பத்தையும் பாது காக்க ஹெல்மெட் அணிவது அவசியம் என்று பொதுமக்களுக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் அறிவுறுத்தியுள்ளார்.
சாலை விபத்தில் உயிரிழந்த சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த கட்டுமானப் பணி ஒப்பந்த தாரரின் மனைவி, கூடுதல் நஷ்ட ஈடு கேட்டு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
மோட்டார் வாகனச் சட்டம் 1988, பிரிவு 129-ன்கீழ் இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். ஆனால், பலரும் ஹெல்மெட் அணியாததால் விலைமதிப்பில்லா உயிரை இழக்கின்றனர்.
11.54 கோடி இருசக்கர வாகனங்கள்
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத் தின் தகவல்படி, இந்தியாவில் 2001-ம் ஆண்டு 3 கோடியே 85 லட்சத்து 56 ஆயிரத்து 26 இருசக்கர வாகனங்கள் இருந்தன. இது, 2012-ம் ஆண்டு 11 கோடியே 54 லட்சத்து 16 ஆயிரத்து 175-ஆக அதிகரித்துள்ளன.
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் 32 வரை மொத்தம் 188.09 லட்சம் வாகனங்கள் சாலையில் ஓட்டிக் கொண்டிருக்கின்றன. இதில் இருசக்கர வாகனங்கள் மட்டும் 155.95 லட்சம். தமிழக போக்குவரத்துத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் 2006-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை பதிவு செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, 2006-07ம் ஆண்டு இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை 75,03,426. இது, 2013-14-ல் 1 கோடியே 55 லட்சத்து 95 ஆயிரத்து 140 ஆக உயர்ந்துள்ளது. இந்த புள்ளிவிவரங்கள், இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே செல்வதைக் காட்டுகிறது.
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டு களில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது ஹெல்மெட் அணியாமல் சென்றதால் 41 ஆயிரத்து 330 பேர் உயிரிழந் துள்ளனர் என்று தமிழக காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.
ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம், அனைத்து உயர் நீதிமன்றங்கள் பல்வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளன. ஆனால், இருசக்கர வாகன ஓட்டி களில் 50 சதவீதம் பேர் ஹெல்மெட் அணிவதில்லை. எனவே, இவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழப்பதைத் தடுக்க தமிழக உள்துறை முதன்மைச் செயலாளரும், தமிழக காவல்துறை தலைவரும் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். பொதுமக்களும் தங்களை மட்டுமல்லாமல், அவரவர் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ள கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும்.
ஹெல்மெட் அணிபவர் நேராக வும், பக்கவாட்டிலும் பார்ப்பதற்கு வசதியாக ஹெல்மெட் வடிவமைக் கப்படுகிறதா என்பதை மத்திய அரசு கண்காணிக்க வேண்டும். ஹெல்மெட் அணிவது தொடர்பான வழக்கு விவரங்களை உள்துறை செயலாளரும், காவல்துறை தலை வரும் 2 மாதங்களுக்கு ஒருமுறை இந்த நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் ஹெல்மெட் அணிகிறார்களா என்பதை கண் காணிக்க வேண்டும் என்றும், ஹெல் மெட் அணியாதவர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.