தமிழகம்

புதுச்சேரியில் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் ஒரு மாதத்துக்குள் நிரப்பப்படும்: முதல்வர் ரங்கசாமி தகவல்

செய்திப்பிரிவு

அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் ஒரு மாதத்துக்குள் நிரப்பப்படும். அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ பட்ட மேற்படிப்பு விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் நேற்று திறக்கப் பட்டன. இதற்கிடையே பள்ளிகளில் புதுவகுப்பு புகுவிழா நடத்த அரசு உத்தரவிட்டது. அதன்படி முதல்வர் தொகுதியில் உள்ள கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதுவகுப்பு புகுவிழா நடைபெற்றது. பள்ளி துணை முதல்வர் இளங்கோ தலைமை வகித்தார்.

மாணவ, மாணவியருக்கு சீருடைகளை வழங்கி முதல்வர் என்.ரங்கசாமி பேசியதாவது:

நடந்து முடிந்த 10-ம் வகுப்பு தேர்வில் அரசுப் பள்ளிகள் அதிக தேர்ச்சி பெற்றன. பிளஸ் டு தேர்வில் தான் அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைந்தது. இதற்கு ஆசிரியர்கள் பற்றாக்குறையும் ஒரு காரணமாகும். வரும் ஆண்டில் அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும். அரசு பள்ளிகளில் காலியாக உள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங் களும் 1 மாதத்தில் நிரப்பப்படும்.

புதுச்சேரியில் ஏழை, எளிய மாணவ, மாணவியர் தரமான கல்வி பெற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பெரியவர்களின் ஆசியோடு பள்ளி திறக்கும் நாளில் வகுப்புக்கு செல்ல வேண்டும் என்பதற்காக புதுவகுப்பு புகு விழா நடத்தப்படுகிறது. கதிர்காமம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகிலேயே அரசு மருத்துவக் கல்லூரி, கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இங்கு நாம் பயில வேண்டும் என்ற நோக்கத்தை மாணவர்கள் வளர்க்க வேண்டும்.

புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் மொத்தம் 119 பேர் இறுதியாண்டு தேர்வு எழுதினர். இதில் 110 பேர் தேர்ச்சி பெற்றனர். அரசு மருத்துவக் கல்லூரி தரமானதாக செயல்படுகிறது. மருத்துவப்பட்ட மேற்படிப்பு தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப் படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி இணை இயக்குநர் பார்த்தசாரதி, எம்எல்ஏக்கள், வாரியத் தலை வர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல் அருகாமையில் உள்ள தில்லையாடி வள்ளியம்மை அரசு பள்ளி மாணவர்களும் இதே விழாவில் கலந்து கொண்டனர்.

மோசமான சாலை

புதுச்சேரியில் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டநிலையில் பல இடங்களில் மோசமான சாலை யால் மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளானார்கள். அத்துடன் சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சாலைகளை சரி செய்ய வேண்டும், பள்ளி தொடங்கும் நேரம், பள்ளி விடும் நேரங்களில் கூடுதலாக போக்குவரத்து போலீ ஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

SCROLL FOR NEXT