தமிழகம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்களிக்க தேவையான ஆவணங்கள்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

செய்திப்பிரிவு

வாக்காளர் அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள் பாஸ்போர்ட், வாகன ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட 12 ஆவணங்களைக் காட்டி ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்களிக்கலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.

சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடக்கிறது. காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைகிறது. வாக்காளர்கள் தங்கள் வாக்கை பதிவுசெய்ய வரும்போது கொண்டு வரவேண்டிய ஆவணம் குறித்த அறிவிப்பை தமிழக தேர்தல் துறை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, வாக்குப்பதிவுக்கு முன், தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டையை வாக்காளர்கள் காட்ட வேண்டும். வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் அல்லது புகைப்படம் தொடர்பான பிரச்சினை உள்ளவர்கள் பின்வரும் ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காட்டி வாக்களிக்கலாம்.

இதன்படி, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, வங்கி அல்லது அஞ்சல் அலுவலகம் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய கணக்கு புத்தகங்கள், பான் கார்டு, ஆதார் கார்டு, தேசிய மக்கள் தொகை பதிவு அடிப்படையில் இந்திய பதிவாளர் ஜெனரலால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு, மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட அட்டை, பணியாளர் நலத்துறை வழங்கிய காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், தேர்தல் துறையால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் சீட்டு மற்றும் எம்பி, எம்எல்ஏக்களுக்கு வழங்கப்பட்ட அங்கீகார அடையாள அட்டை ஆகிய 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காட்டி வாக்களிக்கலாம்.

புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் சீட்டுகள் வாக்குப்பதிவு நடக்கும் சில தினங்கள் முன்பு விநியோகிக்கப்படும். தேர்தல் நடக்கும் தொகுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்று, அவர்களிடம் வேறு தொகுதியில் பெற்ற வாக்காளர் அடையாள அட்டை இருப்பின் ஏற்றுக்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT