தமிழகம் முழுவதும் வானிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தால் காற் றாலை நிறுவனங்கள், தங்களது மின் உற்பத்தி இயக்கத்தை ஞாயிற்றுக்கிழமை நிறுத்தி வைத்தன. இதனால் காற்றாலை மின் உற்பத்தி பூஜ்யமானது.
தென் மேற்கு வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த சனிக்கிழமை முதல் வானிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் ஒரு சில இடங்களில் கன மழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்தது.
ஒரு சில இடங்களில் மேக மூட்டம் அதிகமாக இருந்ததாலும் இடி, மின்னலுக்கான அறிகுறிகள் இருந்ததாலும் காற்றாலை மின் உற்பத்தி நிறுவனங்கள் முன்னெச் சரிக்கை நடவடிக்கை மேற்கொண் டன. அதன்படி, சனிக்கிழமை நள்ளிரவு 12.30 மணி முதல் காற்றா லைகளின் இயக்கத்தை நிறுத்தி வைத்தன. இதனால் ஞாயிற்றுக் கிழமை பகல் 11 மணி வரை காற்றாலை மின் உற்பத்தி நிலவரம் பூஜ்யம் என்ற நிலையிலேயே இருந்தது.
இதுகுறித்து மின் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
எதிர்பாராத மழை, இடி, மின்னல் மற்றும் நிலையற்ற காற்று போன்றவற்றால் காற்றாலைகளின் பிளேடுகளும் டர்பைன் இயந்தி ரங்களும் சேதமடைய அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே, இதுபோன்ற நிலையற்ற வானிலை நிலவும்போது, காற்றாலை நிலைய இயக்கத்தை நிறுவனங்கள் சிறிது நேரமோ அல்லது நாள் முழுவதுமோ நிறுத்தி வைக்கும்.
சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தெற்கு, மேற்கு மாவட்டங்களில் வானிலையில் பெரிய மாற்றம் இருந்ததால், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளை ஒட்டியுள்ள பெரும்பாலான காற்றாலைகளின் இயக்கம் நிறுத்தி வைக்கப்பட்டி ருந்தது. இதனால் சனிக்கிழமை நள்ளிரவு 12.30 மணிக்கு 6 மெகாவாட் மட்டுமே மின்சாரம் உற்பத்தியானது. ஞாயிறு காலை 7 மணி முதல் 10 மணிவரை பூஜ்யம் என்ற நிலையிலேயே இருந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, தமிழக அனல் மின் நிலையங்களின் மின் உற்பத்தி, சனிக்கிழமை நள்ளிர வில் அதிகபட்சமாக 3,975 மெகா வாட்டாக உயர்ந்தது. ஞாயிற்றுக் கிழமை பகல் முழுவதும் சரா சரியாக 3,800 மெகாவாட் உற்பத்தி தொடர்ந்தது. சனிக்கிழமை மத்திய மின் நிலையங்களில் சரிந்திருந்த மின் உற்பத்தி, ஞாயிற்றுக்கிழமை 3,337 மெகாவாட்டாக உயர்ந்தது. இதனால் ஒரு சில இடங்களில் பராமரிப்புக்கான மின் வெட்டு தவிர, மற்ற அனைத்து இடங்களி லும் மின் வெட்டு அமல்படுத்தப் படவில்லை. முழுமையான மின்சாரம் விநியோகிக்கப்பட்டது.