தமிழகத்தில் மணல் கொள்ளையை தடுத்திட உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழகத்தில் இயற்கைய வளங்களை அபகரிப்பதில் சமூக விரோத சக்திகளும், சுயநலக்கும்பலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இத்தகை சுரண்டலுக்கு தமிழக அதிகாரிகளில் சிலர் துணையாகவும், பாதுகாப்பாகவும், செயல்பட்டு வருகின்றனர்.
மணல் அள்ளப்படுவதை போராடி வருகின்றனர், மணல் கொள்ளைக்கு எதிராக போராடும் மக்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்துவதும் அப்பாவி மக்கள் மீது வழக்குகள் பதிவு செய்து சிறையில் அடைப்பதும், தொடர்வது மிகுந்த கவலையளிக்கின்றது.
குறிப்பாக வேலூர் மாவட்டம் பாலாற்றில் தொடர்ந்து மணல் அள்ளப்படுவதை தடுக்கக்கோரி அம்மாவட்ட மக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்ட, காவேரிப்பாக்கம் அடுத்துள்ள களத்தூரியில் மணல் குவாரி அமைக்கப்படுவதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.அப்பகுதி மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து, மணல் குவாரி அமைக்கப்படுவதை தடுத்து நிறுத்திட காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
ஆனால் அதற்கு மாறாக மணல் குவாரிக்கு எதிராக போராடிய மக்களை கைது செய்து சிறையில் அடைத்ததுடன், கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்திட மக்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியது வன்மையாக கண்டிக்கதக்கது.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் விடுதலை செய்வதுடன் அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெறவும், நியாயமான கோரிக்கைகளுக்காக போராடிய மக்கள் மீது தடியடி நடத்திய காவல்துறை மீதும், இச்செயலுக்கு காரணமான அதிகாரிகள் மீதும், நடவடிக்கை எடுத்திட வேண்டும்'' என்று முத்தரசன் கூறியுள்ளார்.