குறுவை நெல் சாகுபடிக்காக காவிரி டெல்டா பகுதி விவசாயி களுக்கு தமிழக அரசால் அறிவிக் கப்பட்டுள்ள ரூ.40 கோடியிலான சிறப்பு தொகுப்புத் திட்ட உதவிகள் தங்களுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிகழாண்டு குறுவை நெல் சாகுபடி செய்வதற்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் டெல்டா பகுதியில் நிலத்தடி நீரைப் பயன்படுத்தி சாகுபடி செய்வதற்காக நாளொன்றுக்கு 12 மணி நேரம் மும்முனை மின்சாரம், கட்டணமில்லா நடவு இயந்திரம், நெல் நுண்ணூட்டக் கலவை, உயிர் உரம், ஜிப்சம் என டெல்டா பகுதி விவசாயிகளுக்கு ரூ.40 கோடியில் தொகுப்புத் திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இத்தகைய திட்டங்களை தங்களுக்கும் கிடைக்கச் செய்ய வேண்டுமென புதுக்கோட்டை மாவட்ட டெல்டா பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் மு.மாதவன் கூறியபோது, “புதுக்கோட்டை மாவட் டத்தில் அறந்தாங்கி, ஆவுடையார் கோவில், மணமேல்குடி ஆகிய டெல்டா பகுதிகளில் 1.6 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப் படுகிறது. அதில், 161 ஏரிகளில் காவிரி நீரைத் தேக்கிவைத்து 21,000 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால், டெல்டா பகுதிகளுக்காக அறிவிக்கப்படும் அரசின் சலுகைகள், திட்டங்கள் எதுவும் இதுவரை புதுக்கோட்டை மாவட்ட டெல்டா விவசாயிகளுக்கு கிடைத்ததில்லை. இந்த முறை அறிவித்துள்ள திட்டங்களையாவது கிடைக்கச் செய்ய மாவட்ட நிர்வாகம் அரசுக்கு தெரிவிக்க வேண்டும்” என்றார்.
ஏரிப் பாசன விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் முத்து ராமலிங்கன் கூறியபோது, “கோடை மழையால் ஏரிகளில் தண்ணீர் தேங்கி யுள்ள நிலையில் அரசின் தொகுப்புத் திட்டங்களை எங்களுக்கும் கிடைக்கச்செய்தால் சாகுபடி செய்வதற்கு வசதியாக இருக்கும். டெல்டா மாவட்டங்களில் ஒன்றாக புதுக்கோட்டையையும் சேர்த்து அரசின் திட்டங்கள் எங்களுக்கும் கிடைக்கும்விதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம்” என்றார்.