வாலாஜாபாத் அருகே விதிகளை மீறி கல்குவாரி செயல்படுவதாக கூறி நேற்று கிராம மக்கள் லாரிகளை சிறைப்பிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாலாஜாபாத் அடுத்த தேவேரியம்பாக்கத்தில் கடந்த 2009 முதல் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு விதிகளை மீறி இரவு நேரங்களில் சக்திவாய்ந்த வெடிகளை வைத்து பாறைகள் உடைக்கப் படுவதாகவும் இதனால் கிராமப் பகுதியில் உள்ள பெரும்பாலான வீடுகளில் விரிசல் ஏற்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. மேலும், குவாரியில் பாரம் ஏற்றிச்செல்லும் லாரிகள் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகளவு கற்கள் ஏற்றிக்கொண்டு குடியிருப்புகள் நடுவே அமைந்துள்ள கிராம சாலையில் செல்கின்றன. இதனால், சாலையில் செல்லும் மக்கள் மீது கற்கள் விழுவதாகவும் சாலையும் மோசமவதாகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, கல்குவாரியில் அரசு விதிகள் பின்பற்றப்படுகிறதா என, மாவட்ட கனிளவளத்துறை ஆய்வு செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் கல்குவாரிக்குச் சொந்தமான லாரிகளை சிறைபிடித்து நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த ஒரகடம் காவல் ஆய்வாளர் பாலசுப்ரமணியம் கிராம மக்களுடன் பேச்சு நடத்தினார். இதை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் சண்முகம் கூறியதாவது:
கிராம மக்களின் புகார் குறித்து குவாரியில் விசாரித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, காஞ்சிபுரம் கோட்டாட்சியர் மற்றும் கனிமவளத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.