தமிழகம்

3 சக்கர மோட்டார் சைக்கிள் கோரி 20-வது முறையாக மனு கொடுத்த மாற்றுத் திறனாளி

செய்திப்பிரிவு

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள அபினிமங்கலத்தைச் சேர்ந்தவர் செல்வம்(31). மாற்றுத் திறனாளியான இவர், அஞ்சல் வழியில் இளங்கலை பட்டம் பயின்று வருகிறார்.

இரு கால்களும் முற்றிலும் செயல்படாத நிலையில் இருக்கும் செல்வத்துக்கென 15 ஆண்டுகளுக்கு முன் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட 3 சக்கர வண்டியைதான் இப்போதும் பயன்படுத்துகிறார்.

இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் 3 சக்கர மோட்டார் சைக்கிள்போல தனக்கு வழங்கக் கோரி மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தார். தன்னுடைய உடல் நிலைக்கு ஏற்றவாறு அதன் வடிவமைப்பில் மாற்றம் செய்து தருமாறு கேட்டதற்கு, “அதுபோல செய்யமுடியாது, பட்ஜெட் அதிகமாகும்” என்ற அதிகாரிகள் மற்றவர்களுக்கு வழங்குவதுபோலவே வழங்குவதாகக் கூறியுள்ளனர். அவ்வாறு அதிகாரிகள் உறுதியளித்து 2 மாதமாகியும் இன்னும் 3 சக்கர மோட்டார் சைக்கிள் கிடைத்தபாடில்லை என்கிறார் செல்வம்.

இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது: இதுவரை 20-க்கும் அதிகமான முறை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளேன். 2 மாதத்துக்கு முன் வந்தபோது இரண்டே வாரத்தில் உங்கள் வீட்டுக்கே வண்டி வந்துவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லை. அதனால்தான் இன்று மனு கொடுக்க வந்துள்ளேன்.

தற்போது என்னிடம் இருக்கும் சக்கர வண்டியை தள்ளிச் செல்ல ஒருவரின் துணை வேண்டும். இதுவும் தற்போது சரியாக செயல்படவில்லை. மேலும், என்னுடைய படிப்பு மற்றும் சுய தொழில் செய்வது தொடர்பாக பல்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. எங்கள் ஊரில் இருந்து ஆட்சியர் அலுவலகம் வர கார் வாடகையாக ரூ.2 ஆயிரம் செலவாகிறது. கடந்த 2 வருடத்தில் கார் வாடகையாக மட்டுமே ரூ.50 ஆயிரம் வரை ஆகியுள்ளது. பென்ஷன் வாங்கும் என் தந்தையை நம்பி எவ்வளவு காலம் இருப்பது. எனவே, விரைவில் 3 சக்கர மோட்டார் சைக்கிளும், கல்வி பயில உதவித்தொகையும் வழங்க வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT