தமிழகம்

அதிக கல்விக்கட்டணம் வசூலிப்பதாக புகார்: தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் 2-வது நாளாக விசாரணை

செய்திப்பிரிவு

அதிக கல்விக் கட்டணம் வசூலிக்கப் படுவதாக வந்த புகாரைத் தொடர்ந்து சென்னை ஆசான் மெமோரியல் சீனியர் செகண்டரி பள்ளி நிர்வாகி களிடம் நேற்று 2-வது நாளாக விசாரணை நடத்தப்பட்டது.

அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக சென்னை அடையாறு பால வித்யா மந்திர் சீனியர் செகண்டரி பள்ளி மீதும், ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலை ஆசான் மெமோரியல் சீனியர் செகண்டரி பள்ளி மீதும் நீதிபதி சிங்காரவேலு கமிட்டியிடம் மாணவர்களின் பெற்றோர் புகார் அளித்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து, மேற்கண்ட பள்ளிகளின் நிர்வாகிகளையும், பெற்றோரையும் நேரில் வரவழைத்து நீதிபதி சிங்காரவேலு நேற்று முன்தினம் (திங்கள்கிழமை) விசாரணை நடத்தினார். சென்னை டிபிஐ வளாகத்தில் இயங்கும் தனி யார் பள்ளிகள் கட்டண நிர்ணயக் குழு அலுவலகத்தில் இந்த விசாரணை நடந்தது. இதையடுத்து, மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட கூடுதல் கட்டணத்தையும், கட்டாய நன்கொடையையும், 8 வாரங்களில் திருப்பிக்கொடுக்குமாறு பால வித்யா மந்திர் பள்ளி நிர்வாகத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில், ஆசான் மெமோரியல் பள்ளி மாணவர்களின் பெற்றோரிடமும், பள்ளியின் தாளாளர் ஷியாமளா, முதல்வர் உமா பத்மநாபன் ஆகியோரிடமும் நேற்று 2-வது நாளாக விசாரணை நடத்தப்பட்டது. முதல் நாளைப் போன்று நேற்றும் ஏராளமான பெற் றோர் கமிட்டி அலுவலக வளாகம் முன்பு கூடியிருந்தனர். அடுத்த 2 நாட்களில் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு, உத்தரவு பிறப்பிக்கப் படும் என்று நீதிபதி சிங்காரவேலு நிருபர்களிடம் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT